ஸ்வஸ்திக் விஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் ‘அங்கீகாரம்’ திரைப்படத்தை அறிமுக இயக்குநர் ஜே.பி. தென்பாதியான் இயக்கியுள்ளார். இயக்குநர் பா. ரஞ்சித்தின் உதவி இயக்குநராக பணியாற்றிய அனுபவம் கொண்ட அவர், தடகள விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையில் நடைபெறும் போராட்டங்கள், சவால்கள் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் இன்னல்களை மையமாகக் கொண்டு இந்த திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். உண்மை சம்பவங்களின் தாக்கத்துடன் இப்படத்தின் கதை வடிவமைக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
இந்த திரைப்படத்தின் மூலம் ‘அறம்’, ‘அயலான்’ உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்த தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவருடன் சிந்தூரி விஸ்வநாத், விஜி வெங்கடேஷ், ரங்கராஜ் பாண்டே, மன்சூர் அலிகான், அஜித் கோஷி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டிரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று கவனத்தை ஈர்த்திருந்தது. விளையாட்டு வீரர்களின் உண்மை வாழ்க்கைப் போராட்டங்களை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த திரைப்படம் குறித்து ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், தற்போது ‘அங்கீகாரம்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘காண்டெம்ட் ஆப் டைம்’ வெளியாகியுள்ளது. இந்த பாடலை பிரபல பாடகி வைக்கம் விஜயலட்சுமி பாடியுள்ளார். பாடலின் வரிகளை கவிஞர் கார்த்திக் நேத்தா எழுதியுள்ளார். பாடலின் வரிகளும், இசையும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவதுடன், சமூக வலைதளங்களிலும் கவனம் ஈர்த்து வருகிறது. இதன் மூலம் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் மேலும் அதிகரித்துள்ளது.
