அரசியல் காரணங்களால் ‘பருத்திவீரன்’ படத்திற்கு விருது கிடைக்கவில்லை… இயக்குனர் அமீர் OPEN TALK!

எழுத்தாளர் ஜெகன் கவிராஜ் எழுதியுள்ள ‘ஈரம் காயாத கதைகள்’ நூலின் வெளியீட்டு விழா நேற்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குநர் அமீர், தனது வாழ்க்கையில் நிறைவேறாமல் போன இரண்டு முக்கியமான ஆசைகள் குறித்து மனம் திறந்து பேசினார்.

அவர் பேசுகையில், “என்னுடைய குடும்பத்தைப் பொறுத்தவரை, நான் சினிமா துறையில் ஆர்வம் காட்டியபோது அவர்கள் பெரிதாக ஊக்குவிக்கவில்லை. அதே நேரத்தில், என் விருப்பத்திற்கு எதிராக எந்த தடையும் ஏற்படுத்தவில்லை. அவர்கள் யாருமே எந்த நடிகரை பார்க்க வேண்டும் என்று என்னிடம் கேட்டதில்லை. ஆனால் என் வாழ்க்கையில் இரண்டு விஷயங்கள் மட்டும் நடக்காமல் போனது எனக்கு இன்னும் வருத்தமாக இருக்கிறது” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “சைப்ரஸில் நடைபெற்ற திரைப்பட விழாவில் ‘ராம்’ திரைப்படத்திற்காக நான் விருது பெற்றேன். பொதுவாக இதுபோன்ற விருதுகளைப் பெறும் போது பலரும் தங்களது பெற்றோருக்கு அந்த விருதை சமர்ப்பிப்பார்கள். ஆனால் அந்த வாய்ப்பு எனக்கு அமையவில்லை. அதன்பிறகு ‘பருத்திவீரன்’ திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருந்தபோது, அந்தப் படத்திற்காக நிச்சயமாக விருது கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. அப்போது என் அம்மாவை அழைத்துச் சென்று அவர் கைகளால் அந்த விருதை பெறச் செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அன்றைய அரசியல் சூழ்நிலைகள் காரணமாக அந்த விருது எனக்கு கிடைக்கவில்லை. அதனால் என் அம்மாவை மேடையில் நிறுத்தி விருது பெறச் செய்ய வேண்டும் என்ற ஆசை நிறைவேறாமல் போய்விட்டது” என்று உணர்ச்சிபூர்வமாக பேசினார்.

மேலும் அவர் கூறுகையில், “என் மனைவி இதுவரை எந்த நடிகரையும் நேரில் பார்க்க வேண்டும் என்று என்னிடம் கேட்டதில்லை. ஆனால் ஒரே ஒரு முறை மட்டும் நடிகர் சிவக்குமாரை சந்திக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார். சிவக்குமார் சார் எனக்கு மிகவும் நெருக்கமானவர். அப்போது ‘பருத்திவீரன்’ திரைப்படத்தின் பணிகள் நடைபெற்று கொண்டிருந்தன. படம் முடிந்த பிறகு அழைத்துச் செல்லலாம் என்று நினைத்து காத்திருந்தேன். ஆனால் அதன் பின்னர் நடந்த சம்பவங்கள் அனைவருக்கும் தெரியும். இன்று வரை சிவக்குமார் சாரிடம் கூட என் மனைவி அவரை சந்திக்க விரும்பினார் என்ற விஷயத்தை நான் சொல்லவில்லை. அதனால் அந்த ஆசையும் நிறைவேறாமல் போய்விட்டது” என்று தனது மனவேதனையை பகிர்ந்து கொண்டார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading