இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், சிலம்பரசன் நடிப்பில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படம் கோலிவுட்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.வடசென்னை பின்னணியில் கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். மேலும், ஆண்ட்ரியா ஜெரெமையா, பிரியங்கா மோகன், யோகி பாபு, சமுத்திரகனி, விக்ராந்த், கிஷோர், அமீர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துவருகின்றனர்.
இந்த நிலையில், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு நடிகர் சிம்பு குறித்து அளித்த பேட்டியில், “சிம்பு முதலில் இயக்குநர் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்திற்காக தலைமுடியை வளர்த்துவந்தார். ஆனால், ‘அரசன்’ திரைப்படத்தின் கதையை கேட்டதும் அந்த திரைப்படத்தை பின்னுக்கு தள்ளிவைத்து, ‘அரசன்’ திரைப்படத்திற்காக தனது தோற்றத்தை முழுமையாக மாற்றிக்கொண்டார். அவர் இந்த திரைப்படத்தின் கதாபாத்திரமாகவே வாழத் தொடங்கிவிட்டார்” என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், “படப்பிடிப்பிற்காக எவ்வளவு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தாலும், சிம்பு அதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே வந்துவிடுவார். அவர் ஒருபோதும் படப்பிடிப்பிற்கு தாமதமாக வந்ததில்லை. ஆனால், ஏன் அவரை தாமதமாக வருகிறார் என்று சிலர் விமர்சிக்கிறார்கள் என்பது எனக்கு புரியவில்லை. மேலும், ‘அரசன்’ திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்க வேண்டும் என்று சிம்புவே விருப்பம் தெரிவித்தார். சமீபத்தில் வெற்றிமாறன் எனக்கு ஒரு காட்சியை காட்டினார். அதில் சிம்பு நடந்து வரும் காட்சி மிகவும் இனிமையாக இருந்தது” என்று பாராட்டியுள்ளார்.
