நடிகை குஷ்பு மற்றும் அவரது கணவரும், இயக்குநருமான சுந்தர் சி ஆகியோர் இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து, தங்களது மகளின் திருமணத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். நடிகை குஷ்பு கடந்த 2000-ஆம் ஆண்டு இயக்குநர் சுந்தர் சியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அவந்திகா மற்றும் ஆனந்திகா என இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகளின் திருமண அழைப்பை வழங்குவதற்காக பிரதமரை நேரில் சந்தித்துள்ளனர்.
இதுதொடர்பான புகைப்படங்களை தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள குஷ்பு, “இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. நானும் எனது கணவர் சுந்தர் சியும் இணைந்து, எங்கள் மகளுக்கும் ஷ்ரவன் சீனிவாசனுக்கும் நடைபெறவுள்ள திருமணத்திற்கு அவரை அழைத்தோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தனது பதிவில், “பிரதமர் தம்பதியினரை மனமார வாழ்த்தினார். மிகவும் பிஸியான பணிச்சுமைகளுக்கிடையிலும் எங்களுக்காக நேரம் ஒதுக்கிய அவருக்கு எங்களின் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இந்த சந்திப்பு எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் பணிவுணர்வையும் அளித்துள்ளது” என்றும் தெரிவித்துள்ளார்.
