‘டாடா’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் கணேஷ் கே. பாபு, நடிகர் ரவி மோகனை வைத்து ‘கராத்தே பாபு’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ரவி மோகனுடன் இணைந்து பணியாற்றிய அனுபவத்தை இயக்குநர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “சில கனவுகள் நிறைவேற பல ஆண்டுகள் ஆகலாம். ரவி மோகனுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. இன்று அந்த கனவு நனவாகியுள்ளது” என்று தெரிவித்துள்ளார். அவருடன் பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாத ஒன்று என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரவி மோகனின் 34-வது திரைப்படமாக உருவாகும் ‘கராத்தே பாபு’, அரசியல் மற்றும் ஆக்சன் பின்னணியில் உருவாகும் எமோஷனல் த்ரில்லராக தயாராகி வருகிறது. ஒரு சட்டமன்ற உறுப்பினரின் அரசியல் வாழ்க்கைக்குப் பின்னால் இருக்கும் தனிப்பட்ட வாழ்க்கை, உணர்வுகள் மற்றும் நட்பை மையமாகக் கொண்டு கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இப்படத்தில் தௌதி ஜிவால் கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும் நாசர், கே.எஸ். ரவிக்குமார், சக்தி வாசுதேவன், வி.டி.வி. கணேஷ், காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இசையமைக்கும் இந்தப் படம், எழில் அரசு கே ஒளிப்பதிவில் உருவாகி வரும் நிலையில், வரும் ஆகஸ்ட் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
