சினிமா டிக்கெட் கட்டணம் மக்களுக்கு சுமையாகிவிட கூடாது என்பதில் தெளிவாக உள்ளோம் – அமைச்சர் ராஜ்மோகன்!

ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில், இயக்குநர் எச். வினோத்தின் உதவி இயக்குநரான ஹர்ஷா இயக்கத்தில், ஆகாஷ் முரளி நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தின் அறிவிப்பை சென்னையில் இன்று பள்ளிக்கல்வி மற்றும் செய்தித்துறை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது, ‘ஜனநாயகன்’ திரைப்படம் எப்போது வெளியாகும், திரைப்பட டிக்கெட் கட்டணம் உயருமா, நடிகர் விஷால் விமர்சனம் செய்திருக்கிறாரே என்ற கேள்விகளை செய்தியாளர்கள் எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன், “முதல்வர் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் பெறுவதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ‘ஜனநாயகன்’ மட்டுமல்ல, எந்த திரைப்படத்தையும் அரசியல் காரணங்களுக்காக தடுக்க முடியாது. ‘ஜனநாயகன்’ திரைப்படத்தில் முதல்வர் விஜய் என்று பெயர் வருமா என்று கேட்கிறார்கள். எங்களைப் பொறுத்தவரையில் அவர் எப்போதும் தளபதிதான்” என்று கூறினார்.

மேலும் அவர் பேசுகையில், “திரைத்துறை என்பது மிகப்பெரிய தலைவர்களை உருவாக்கிய தாய்மடி போன்றது. அதனால் திரைத்துறையினரின் எந்த கோரிக்கையாக இருந்தாலும் அதை பரிசீலித்து நிர்வாக ரீதியாக சரிசெய்யப்படும். ஐமேக்ஸ் மற்றும் அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட திரையரங்குகளுக்கு டிக்கெட் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கைகள் வந்துள்ளன. ஆனால் டிக்கெட் கட்டணம் எந்த நிலையிலும் மக்களுக்கு சுமையாக மாறக்கூடாது என்பதில் தமிழக அரசு தெளிவாக உள்ளது. மற்ற மாநிலங்களில் கட்டணங்கள் அதிகரித்திருந்தாலும், தமிழகத்தில் அனைத்து தரப்பினரையும் கருத்தில் கொண்டு மட்டுமே விலை நிர்ணயம் செய்யப்படும்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், “நான் ஆசைப்பட்ட பல விஷயங்களை நிறைவேற்ற உதவும் மனைவி மற்றும் பெற்றோர்கள் எனக்கு கிடைத்துள்ளனர். அதேபோல் அரசியலிலும் என்னை வழிநடத்தும் அண்ணன் போன்ற தலைவர் கிடைத்துள்ளார். இந்த பொறுப்பை மக்களோடு தொடர்பு கொள்ளும் ஒரு கருவியாகவே நான் பார்க்கிறேன். சிறிய திரைப்படங்களுக்கு வழங்கப்பட வேண்டிய மானியங்கள் பல ஆண்டுகளாக சரியாக சென்றடையவில்லை. இனி அதற்காக தனியான குழு அமைத்து சரிசெய்யப்படும். விரைவில் இதுகுறித்து அறிவிப்புகள் வெளியாகும். சிறிய திரைப்படங்கள்தான் தமிழ் சினிமாவின் ஆக்சிஜன். குறைந்த பட்ஜெட் திரைப்படங்களை ஒருபோதும் கைவிட மாட்டோம். அவர்களுக்கு நாங்கள் துணையாக இருப்போம்” என்று தெரிவித்தார்.மேலும், “சில நிர்வாக காரணங்களால் திரையரங்குகளின் வாகன நிறுத்த கட்டணம் தற்போது உயர்ந்திருக்கலாம்” என்றும் கூறினார்.

அதேபோல், “உங்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டதை நடிகர் விஷால் விமர்சித்திருக்கிறாரே?” என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “எனக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டதை விமர்சித்த நண்பர் நடிகர் விஷாலுக்காகவும் நான் வேலை செய்வேன். அவர் நம்பிக்கை கொள்ளும் வகையில் சிறப்பாக பணியாற்றி தளபதி பெயரை காப்பாற்றுவேன். அவருக்கு என்னை தெரியாமல் இருக்கலாம். ஆனால் நான் அவரது திரைப்படங்களை பார்த்திருக்கிறேன். எனக்கு அவரை மிகவும் பிடிக்கும். என் தொகுதியில் உள்ள சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில்தான் முதல்வர் பிறந்தார். அவர் பிறந்தநாளன்று பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தை பல ஆண்டுகளாக செய்து வருகிறோம். அன்றைய தினம் பல நலத்திட்டங்களையும் வழங்குவோம். அது எங்களுக்கு ஒரு கொண்டாட்ட நாள். அந்த நாளிலேயே ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியானால் அது எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருக்கும்” என்று தெரிவித்தார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading