கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் சிம்பு நடித்து வரும் திரைப்படம் ‘அரசன்’. மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 6-ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்காக திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன.இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, சமுத்திரகனி, ஆண்ட்ரியா ஜெரெமையா, அமீர், கிஷோர், விக்ராந்த் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துவருகின்றனர். மேலும், இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இந்த நிலையில், ‘அரசன்’ திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக தான் நடித்துவருவதை நடிகை யோகலட்சுமி உறுதிப்படுத்தியுள்ளார். ‘ஹார்ட் பீட்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ உள்ளிட்ட திரைப்படங்களில் தனது சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் பெற்ற யோகலட்சுமி, தற்போது சிம்புவுடன் இணைந்து நடிப்பதால் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து யோகலட்சுமி பேசுகையில், “நான் சிம்பு சாருக்கு ஜோடியாக நடித்துவருகிறேன். அவருடன் இணைந்து ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டேன். அந்த புகைப்படத்தை முதலில் என் அம்மாவிடம் காட்டினேன். அதை பார்த்ததும் அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அந்த தருணத்தில் என்ன பேசுவது என்றே எனக்குத் தெரியவில்லை” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
