கமல்ஹாசன் சார்-ஐ கண்டதும் மனதுக்குள் துள்ளி குதித்தேன் – நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ்!

2025ஆம் ஆண்டு வெளியான துல்கர் சல்மான் நடித்த ‘காந்தா’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ். தனது முதல் தமிழ் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அவர், தற்போது தொடர்ந்து தமிழ் திரைப்படங்களில் வாய்ப்புகளை பெற்று வருகிறார். அந்த வகையில், அடுத்ததாக கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தில் நடிக்க அவர் ஒப்பந்தமாகியுள்ளார்.

‘தாய் கிழவி’ திரைப்படத்தை இயக்கிய சிவக்குமார் முருகேசன் இயக்கும் இந்த புதிய படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கிறார். ‘சேயோன்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மதுரையில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் மூலம் பாக்யஸ்ரீ போர்ஸ், தமிழ் சினிமாவில் மேலும் ஒரு முக்கியமான வாய்ப்பைப் பெற்றுள்ளார்.

இந்த நிலையில், சமீபத்தில் நடிகர் கமல்ஹாசனை சந்தித்த அனுபவத்தை நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் அவர், “மிகவும் அன்பிற்குரிய கமல்ஹாசன் சார், உங்களின் வளர்ச்சியையும் சாதனைகளையும் பார்த்துக்கொண்டே வளர்ந்த என் மனதிற்குள் இருக்கும் அந்தச் சிறுமி, நீங்கள் என் தோள்களில் கை வைத்து எனக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த அந்த நொடியில் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தாள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர், “ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுவதில் நான் மிகுந்த பெருமை கொள்கிறேன். உங்களை பெருமைப்படுத்தும் வகையில் நான் முழு அர்ப்பணிப்புடன் செயல்படுவேன் என்று உறுதியளிக்கிறேன்” என்றும் தனது பதிவில் தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading