‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் அஜித்குமார், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் ‘டேர்டெவில்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். சினிமாவுக்கு இணையாக கார் பந்தயத்திலும் தீவிர ஆர்வம் கொண்டுள்ள அஜித், தனது பெயரில் ரேசிங் அணியை உருவாக்கி சர்வதேச அளவிலான போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். அவரது சர்வதேச கார் ரேஸ் அனுபவங்களையும், அந்தப் பயணத்தில் அவர் எதிர்கொண்ட சவால்களையும் பதிவு செய்துள்ள ‘கிளாடியேட்டர்ஸ்’ என்ற ஒரு மணி நேர ஆவணப்படமும் அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது.
சர்வதேச கார் பந்தயங்களில் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் அஜித்குமார் ரேசிங் அணி, அடுத்ததாக இங்கிலாந்தில் உள்ள புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் பந்தயக் களத்தில் நடைபெறவுள்ள 2026 மிச்செலின் லு மான்ஸ் கோப்பை தொடரில் பங்கேற்க உள்ளது. இதற்கு முன்னதாக கடந்த வாரம் ஐரோப்பாவில் நடைபெற்ற மிச்செலின் லு மான்ஸ் கோப்பை போட்டியிலும் அஜித்தின் அணி பங்கேற்றிருந்தது. தற்போது சில்வர்ஸ்டோனில் நடைபெறவுள்ள அடுத்த சுற்றுப் போட்டியில் அஜித்குமார் ரேசிங் அணி எத்தகைய செயல்பாட்டை வெளிப்படுத்தப் போகிறது என்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, கடந்த வாரம் ஐரோப்பாவில் நடைபெற்ற கார் பந்தயத்தின் போது அஜித் ஓட்டிச் சென்ற கார் எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி குறிப்பிடத்தக்க அளவில் சேதமடைந்த போதிலும், அஜித்குமார் எவ்வித காயமும் இன்றி பாதுகாப்பாக தப்பினார். கார் பந்தயத்தில் அஜித் விபத்தை எதிர்கொள்வது இதுவே முதல் சம்பவம் அல்ல. ஏற்கெனவே பல்வேறு நாடுகளில் நடைபெற்ற சர்வதேச போட்டிகளின்போதும் அவர் விபத்துகளை சந்தித்துள்ளார். இருப்பினும், அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து ரேசிங் பயணத்தை முன்னெடுத்து வருகிறார்.
