தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகர்களான சூர்யா மற்றும் திரிஷா இணைந்து நடித்த ‘கருப்பு’ திரைப்படம் கடந்த 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார். மேலும், சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.
நடிகர் சூர்யா நடித்த ‘கருப்பு’ திரைப்படம் கடந்த சில நாட்களாக தமிழக திரையரங்குகளில் மிகப்பெரிய வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது என்று கூறினாலும் அது மிகையாகாது. விடுமுறை நாட்களில் கிடைத்த வரவேற்பு வேலை நாட்களிலும் தொடர்ந்து காணப்படுகிறது. சூர்யாவின் திரைப்பயணத்தில், திரையரங்கு வசூல் மூலம் மட்டும் 200 கோடி ரூபாயை கடந்த முதல் திரைப்படமாக ‘கருப்பு’ உருவாகியுள்ளது.
இந்த நிலையில், ‘கருப்பு’ திரைப்படம் உலகளவில் 300 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், இந்த திரைப்படம் விரைவில் 500 கோடி ரூபாயை கடந்துவிடும் என்றும், சூர்யாவின் திரைப்பயணத்தில் அதிக வசூல் செய்த திரைப்படமாக இது மாறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் வெளிநாடுகளில் இந்த திரைப்படம் 7 மில்லியன் அமெரிக்க டாலர் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
