இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், சிம்பு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘அரசன்’. இந்த திரைப்படத்தில் பிரியங்கா மோகன், அமீர், சமுத்திரகனி, ஆண்ட்ரியா ஜெரெமையா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துவருகின்றனர். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கோவில்பட்டியில் தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னை நகரில் தீவிரமாக நடைபெற்று தற்போது நிறைவடையும் நிலையில் உள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பிரம்மாண்டமான திறந்தவெளி அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த அரங்கம் வடசென்னை பகுதியை தத்ரூபமாக பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மூன்றாம் கட்ட படப்பிடிப்பில் விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், ராஜன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள அமீரும், சந்திரா கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஆண்ட்ரியாவும் இந்தக் கட்ட படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இன்னும் மூன்று மாதங்களில் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
அதன்படி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 6-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிம்புவின் திரைப்பயணத்தில் இதுவரை உருவான திரைப்படங்களில் மிகவும் பிரம்மாண்டமான படைப்புகளில் ஒன்றாக ‘அரசன்’ அமையும் என்றும் திரையுலக வட்டாரங்களில் கூறப்படுகிறது.
