கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் 10-வது திரைப்படமாக உருவாகியுள்ள ‘டோரதி’ படத்தில் கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிஷிகாந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இளையராஜாவின் நீண்ட திரைப்பயணத்தில் இது 1540-வது படமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கார்த்திக் சுப்புராஜ் மற்றும் இளையராஜா முதல் முறையாக இணைந்துள்ள ‘டோரதி’ திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஆரம்பம் முதலே எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. உலகம் முழுவதும் இப்படத்தை செப்டம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதனிடையே, படத்தின் பாடல்கள் குறித்த அறிவிப்புகளும் ரசிகர்களின் கவனத்தை தொடர்ந்து ஈர்த்து வருகின்றன.
அந்த வகையில், ‘டோரதி’ படத்தின் முதல் பாடலான ‘கல்யாண விருந்து’ ஏற்கெனவே வெளியாகி சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பை பெற்றது. இளையராஜா இசையமைத்த இந்தப் பாடலை அந்தோணி தாசன், யுகேந்திரன் மற்றும் பிரியா ஜெர்சன் ஆகியோர் இணைந்து பாடியிருந்தனர். தற்போது படத்தின் 2-வது பாடலாக ‘முத்துமணி’ வெளியாகியுள்ளது. இளையராஜா இசையமைப்பதுடன், ஸ்வேதா மோகனுடன் இணைந்து இப்பாடலை பாடியுள்ளார். மேலும், பாடலுக்கான வரிகளையும் இளையராஜாவே எழுதியிருப்பது ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.
—
