ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில், நடிகர் சூர்யா மற்றும் த்ரிஷா நடித்த ‘கருப்பு’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தப் படத்தில் ஸ்வாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கடந்த மே 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்று வருகிறது.
இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜியிடம், சமூக வலைத்தளங்களில் அவரை குறித்து எழுந்துவரும் சில விமர்சனங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “என்னைப் பற்றி பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ் தொண்டன், தி.மு.க ஆதரவாளர் என்று பலவிதமாக பேசுகிறார்கள். ஆனால் பொதுமக்களுக்கு என்னைப் பற்றி நன்றாகத் தெரியும். இந்தப் படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய நாள், எனக்கே தெரியாமல் ஒரு வீடியோவில் நான் உணர்ச்சிவசப்பட்டு அழுதுவிட்டேன்.
நானும் சூர்யா சாரும் வெற்றி பெற வேண்டும் என்று ஒட்டுமொத்த தமிழ்நாடும் எங்களை மனதார வாழ்த்தியது. அதன்மூலம் மக்களின் உண்மையான அன்பும் உணர்வும் என்ன என்பதை நான் புரிந்துகொண்டேன். தற்போது திரையரங்குகளில் ரசிகர்கள் இந்த திரைப்படத்தை கொண்டாடும் விதத்தை அனைவரும் பார்க்க முடிகிறது. ஆனால் இணையத்தில் பகிரப்படும் சில விஷயங்கள் நிஜ வாழ்க்கையுடனோ, உண்மையுடனோ எந்த தொடர்பும் இல்லாததாகவே தோன்றுகிறது. நான் எப்போதும் மக்களின் அன்பை மட்டுமே எதிர்பார்க்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
