நடிகர் அர்ஜூன் தாஸூக்கு திருமணமா? உண்மை என்ன?

நடிகர் அர்ஜுன் தாஸ், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘கைதி’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றார். அந்த திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த அவர், தனது தனித்துவமான குரல் மற்றும் நடிப்பால் பெரும் கவனத்தை ஈர்த்தார். குறிப்பாக, அந்த கதாபாத்திரத்தின் மூலம் தமிழக அரசின் சிறந்த வில்லன் நடிகர் விருதையும், பல்வேறு திரைப்பட விருதுகளையும் பெற்றார். ‘கைதி’ திரைப்படம் அவரது திரைப்பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

அதனைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ போன்ற படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம், அர்ஜுன் தாஸ் தனக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார். தொடர்ந்து ‘அநீதி’, ‘ரசவாதி’, ‘போர்’ உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தற்போது அவரது கைவசம் ‘கான் சிட்டி’ மற்றும் ‘ஒன்ஸ்மோர்’ உள்ளிட்ட திரைப்படங்கள் உள்ளன. அதில் ‘கான் சிட்டி’ திரைப்படம் வரும் ஜூன் 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அர்ஜுன் தாஸ் ரகசியமாக நிச்சயதார்த்தம் செய்து கொள்ள உள்ளார் என்றும், ஒரு நடிகையுடன் காதலில் இருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் பல தகவல்கள் பரவின. மேலும், நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாக பரவின.

ஆனால் தற்போது இந்த தகவல்களுக்கு முழுமையான மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அர்ஜுன் தாஸின் மக்கள் தொடர்பு மேலாளர் யுவராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அர்ஜுன் தாஸ் திருமணம் குறித்து சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல்களில் எந்தவிதமான உண்மையும் இல்லை. இதுபோன்ற தகவல்களை வெளியிடுவதற்கு முன்பு அதன் உண்மைத்தன்மையை உறுதி செய்து கொள்ளுமாறு ஊடக நண்பர்களை கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading