தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமான நடிகைகளில் ஒருவரான ராய் லட்சுமி, ‘தர்மபுரி’, ‘தாம் தூம்’, ‘காஞ்சனா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சினிமா பணிகளில் இருந்து விலகி ஓய்வில் இருந்த அவர், தற்போது மீண்டும் திரையுலகிற்கு திரும்ப தயாராகி வருகிறார்.
சமீபத்தில் அளித்த பேட்டியில், தமிழில் தன்னை மக்கள் பெரும்பாலும் கிளாமர் நடிகையாகவே பார்க்கிறார்கள் என்று அவர் கூறினார். “நான் புடவை அணிந்து நடித்தாலும் அந்த பார்வை மாறுவதில்லை. ஒரு நடிகை எந்த வகை கதாபாத்திரத்தில் அதிகம் கவனம் பெறுகிறாரோ, அதே மாதிரியான வேடங்களையே மக்கள் தொடர்ந்து எதிர்பார்க்கிறார்கள்” என்றார்.
தொடர்ந்து பேசிய ராய் லட்சுமி, “கிளாமர் வேடங்களில் நான் ஏற்கனவே நிறைய நடித்துவிட்டேன். இனிமேல் வாழ்க்கைக்கு நெருக்கமான, யதார்த்தமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆசை. மேக்கப் கூட இல்லாமல் ஒரு படத்தில் நடிப்பது என் நீண்ட நாள் விருப்பம்” என்று தெரிவித்துள்ளார்.
