மலையாள திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்த நடிகை ஆன் ஷீத்தல், ‘காளிதாஸ்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் நடிகர் பரத்தின் மனைவியாக நடித்திருந்த அவர், தனது இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களின் கவனத்தை பெற்றார். அதனைத் தொடர்ந்து, ஆர்.ஜே.பாலாஜி நடித்த ‘சிங்கப்பூர் சலூன்’ திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது, விரைவில் வெளியாக உள்ள ‘பாதாம்கீர்’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் கதாநாயகியாக ரசிகர்களை சந்திக்க இருக்கிறார்.
இந்த திரைப்படத்தில், புதுமுக நடிகரான சிவகுமாருக்கு ஜோடியாக ஆன் ஷீத்தல் நடித்துள்ளார். இவர்களுடன் நடிகர்கள் சதீஷ், டேனியல் ஆன்னி போப், பிரதீப் ஜோஷ், யோகி பாபு, மதுமிதா, வழக்கு எண் முத்துராமன், லிஜா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பல்வேறு கதாபாத்திரங்கள் இணைந்த இந்த படம் முழுமையான குடும்ப பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது.
‘லார்ட்ஸ் பி தி இன்டர்நேஷனல் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குநர் ஜெய் சக்தி பிரகாஷ் இயக்கியுள்ளார். காதல், நகைச்சுவை மற்றும் ரொமான்ஸ் கலந்த கதை அமைப்பில் இந்த படம் உருவாகி இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. இளம் ரசிகர்களை கவரும் வகையில் படத்தின் திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
