கேரள அரசின் லஞ்ச ஒழிப்புத் துறை, லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு இணைந்து “புராஜெக்ட் ஜீரோ – விஜிலன்ஸ் விசில்” எனும் திட்டத்தை முன்னெடுத்துள்ளது. இந்தத் திட்டத்தின், துவக்க விழா திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் இன்று (ஜூலை 29) நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா, பிரபல மலையாள நடிகர் நிவின் பாலி ஆகியோர் கலந்துகொண்டனர். லஞ்ச ஒழிப்பிற்காக முன்னெடுக்கப்படும் இந்த நடவடிக்கை மக்களின் பங்கேற்பு, தொழில்நுட்பம் சார்ந்த கண்காணிப்புடன் புதுமையான வழிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், கேரள அரசின் புராஜெக்ட் ஜீரோ – விஜிலன்ஸ் விசில் திட்டத்தின் முதல் “விஜிலன்ஸ் கமாண்டோ” எனும் பதவி நடிகர் நிவின் பாலிக்கு வழங்கப்பட்டுள்ளது. இது, அரசு திட்டங்களில் பிரபலங்களுக்கு வழங்கப்படும் தூதர் பதவிக்கு நிகரானது எனக் கூறப்படுகிறது. இந்த விழாவில், நடிகர் நிவின் பாலி உறுதிமொழியை வாசிக்க அவருடன் சேர்ந்து மாணவர்களும், அதிகாரிகளும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். மேலும், அவருக்கு ”விஜிலன்ஸ் கமாண்டோ” பேட்ஜை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா அணிவித்தார்.
