மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் துல்கர் சல்மான். அவரின் ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. தற்போது துல்கர் சல்மான் மலையாளத்தில் ‘ஐயம் கேம்’ என்ற திரைப்படத்திலும், இயக்குநர் பவன் சதினேனி இயக்கும் தெலுங்கு திரைப்படமான ‘ஆகாசம்லோ ஒக தாரா’ படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.
இந்த நிலையில், துல்கர் சல்மான் தற்போது தனது 41வது திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். இயக்குநர் ரவி நெலகுதிதி இயக்கும் இந்த திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும் இந்த திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஓடிடி வெளியீட்டு உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது.
