இசையமைப்பாளராக பிரபலமடைந்த ஹிப் ஹாப் தமிழா ஆதி, கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியான ‘மீசைய முறுக்கு’ திரைப்படத்தின் மூலம் நடிகர் மற்றும் இயக்குநராகவும் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து ‘நட்பே துணை’, ‘நான் சிரித்தால்’, ‘சிவகுமாரின் சபதம்’, ‘அன்பறிவு’ உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றார்.
முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது அதன் இரண்டாம் பாகமான ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தை ஹிப் ஹாப் ஆதி இயக்கி, கதாநாயகனாக இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். சுந்தர் சி மற்றும் குஷ்பு இணைந்து தயாரிக்கும் ‘மீசைய முறுக்கு 2’ படத்தில் சைத்ரா, கெட்டிகா சர்மா, ரம்யா ரங்கநாதன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இவர்களுடன் கேத்திகா சர்மா, யூடியூபர் ஹர்ஷத் கான், நாசர், கருணாஸ், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இதற்கு முன்பாக வெளியான இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இசைக்கலைஞர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் ஆதி அப்பா மற்றும் மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருப்பது டிரெய்லர் மூலம் தெரியவந்துள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இப்படம் வரும் செப்டம்பர் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
