தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நயன்தாரா நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் கடந்த 2020-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மூக்குத்தி அம்மன்’. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தை சுந்தர் சி இயக்கி வருகிறார்.
இப்படத்தில் நயன்தாரா மீண்டும் மூக்குத்தி அம்மன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் சினேகா, ரெஜினா கேசண்ட்ரா, ஊர்வசி, அபிநயா, இனியா, மைனா நந்தினி, யோகிபாபு, துனியா விஜய், ராமச்சந்திர ராஜு, அஜய் கோஷ், சிங்கம்புலி, விச்சு விஸ்வநாத் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதனால் படத்தின் நட்சத்திரப் பட்டாளம் மீதும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
பிரமாண்டமான முறையில் தயாராகி வரும் ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட்டு ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இப்படம் திரைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் படத்தின் முதல் பாடல் குறித்த முக்கிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வரும் 14-ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியாகவுள்ளது.
—
