‘த்ரிஷ்யம்’ திரைப்படத்தின் முதல் இரண்டு பாகங்கள் பெற்ற மிகப்பெரிய வரவேற்பைத் தொடர்ந்து, தற்போது ‘த்ரிஷ்யம் 3’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த படத்தின் மூன்று பாகங்களிலும் ஜார்ஜ்குட்டியின் மகளாக நடித்த நடிகை எஸ்தர் அனில், இந்த திரைப்படத் தொடருடன் தன்னுக்கு உள்ள ஆழமான உணர்ச்சி பிணைப்பைப் பற்றி சமூக வலைதளத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். தமிழில் ‘பாபநாசம்’ திரைப்படமாக ரீமேக் செய்யப்பட்டபோதும், அதே கதாபாத்திரத்தில் எஸ்தர் அனில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “2010 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக நான் சினிமாவில் என் பயணத்தைத் தொடங்கினேன். ஆரம்பத்தில் சில திரைப்படங்களில் மட்டும் நடித்தேன். அப்போது பல விஷயங்களை கற்றுக்கொண்டேன். ஆனால் 2013 ஆம் ஆண்டு வெளியான ‘த்ரிஷ்யம்’ திரைப்படம் என் வாழ்க்கையை முழுமையாக மாற்றியது. அந்த படம் என்னை இந்திய அளவில் இருக்கும் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களிடமும் கொண்டு சென்றது. நான் கனவிலும் நினைக்காத பல வாய்ப்புகளுக்கான கதவுகளை அந்த படம் திறந்து வைத்தது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “சினிமாவில் என் பயணத்தை மாற்றியமைத்ததோடு மட்டுமல்லாமல், என் சொந்த வாழ்க்கையையும் பல வழிகளில் மாற்றியமைத்த படம் ‘த்ரிஷ்யம்’. தற்போது பல ஆண்டுகளுக்குப் பிறகு ‘த்ரிஷ்யம் 3’ வெளியாகியுள்ளது. இந்த நேரத்தில் எனக்குள் ஏராளமான உணர்வுகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. ரசிகர்களின் எதிர்பார்ப்பு, ஆர்வம், வாழ்த்துகள், சிறிய பதற்றம் என அனைத்தும் கலந்த மனநிலையில் இருக்கிறேன். ஆனால் இதையெல்லாம் விட நன்றியுணர்வே எனக்குள் அதிகமாக உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், “ஜீத்து ஜோசப் அங்கிளை சந்தித்த அந்த மறக்க முடியாத இரவுக்காக நான் எப்போதும் நன்றியுடன் இருப்பேன். அவர்தான் லால் அங்கிளின் மகளாக நடிக்க நான் சரியான தேர்வாக இருப்பேன் என்று நம்பி என்னை தேர்ந்தெடுத்தார். என்னுடைய வாழ்க்கைப் பாதையை அமைத்த அந்த தருணத்திற்கும், என்னை நம்பிய அனைவருக்கும் நான் எப்போதும் நன்றிக்கடன்பட்டிருப்பேன்” என்றும் எஸ்தர் அனில் தனது உருக்கமான பதிவில் தெரிவித்துள்ளார்.
