திரையரங்குகளில் சாமி ஆடுவதற்காக ஆட்களை எல்லாம் நாங்கள் அனுப்பவில்லை… ‘கருப்பு’ பட வரவேற்பு குறித்து பகிர்ந்த ஆர்.ஜே. பாலாஜி!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகர்களான சூர்யா மற்றும் திரிஷா இணைந்து நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படம் கடந்த 15-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கியுள்ள இந்த திரைப்படம் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று தொடர்ந்து வெற்றிகரமாக ஓடி வருகிறது. இப்படத்தில் கதாநாயகியாக திரிஷா நடித்துள்ள நிலையில், சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

நடிகர் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படம் கடந்த சில நாட்களாக தமிழக திரையரங்குகளில் ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் வெற்றிநடை போட்டு வருகிறது என்று கூறினாலும் அது மிகையாகாது. விடுமுறை நாட்களில் மட்டுமல்லாமல், வேலை நாட்களிலும் ரசிகர்கள் திரையரங்குகளுக்கு திரளாக வந்து படம் பார்த்து வருவது படத்தின் வரவேற்பை வெளிப்படுத்துகிறது. இதற்கிடையில், ‘கருப்பு’ திரைப்படம் உலகளவில் ரூ.207 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. மேலும், தமிழ்நாட்டில் மட்டும் இப்படம் ரூ.100 கோடி வசூலை கடந்துள்ளதாகவும் படக்குழு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி பல்வேறு திரையரங்குகளுக்கு நேரில் சென்று ரசிகர்களை சந்தித்து வருகிறார். அந்த வகையில், திருப்பூரில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசியுள்ளார். அப்போது அவர் கூறுகையில், “எனக்கு சாமி பக்தி அதிகம். நான் இதுவரை இரண்டு படங்கள்தான் இயக்கியிருக்கிறேன். எல்லா படங்களிலும் ஒரே மாதிரியான விஷயங்களை செய்யவில்லை. ஆனால் இரண்டு சாமி சம்பந்தப்பட்ட படங்களை இயக்கியிருக்கிறேன். நல்ல படங்களை கொடுத்தால் அது மக்களின் மனதில் நீண்ட நாள் நிலைத்து நிற்கும் என்று நம்புகிறேன். இன்னும் நிறைய கதைகள் இருக்கின்றன. இப்போது சாமி படங்களை இயக்கியதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி உள்ளது” என்றார்.

மேலும் அவர் பேசுகையில், “கருப்பசாமி என்பது நம் ஊரின் எல்லைச் சாமி. அவருக்கு சாதி, மதம் என்ற வேறுபாடுகள் கிடையாது. எந்த ஊரில் இருந்தாலும், மக்கள் ஊரை விட்டு வெளியே செல்லும் முன்போ அல்லது ஊருக்குள் வரும்போதோ கருப்பசாமியை வணங்கிவிட்டுத்தான் செல்வார்கள். அந்த வகையில் மக்கள் அனைவரும் தங்களுடைய சாமியாக நினைத்து இந்தப் படத்தை கொண்டாடுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய ஆர்.ஜே. பாலாஜி, “இந்தப் படத்தை நான் குடும்ப ரசிகர்களுக்காகத்தான் எடுத்தேன். விமர்சகர்கள் அல்லது ஆன்லைன் விமர்சனங்களை மனதில் வைத்து நான் படம் எடுக்கவில்லை. படம் வெளியாகும் முன்பே இந்த விஷயத்தை கூறியிருந்தேன். இது மக்களுக்காக உருவாக்கப்பட்ட படம். அதனால் மக்கள் இந்தப் படத்தை கொண்டாடுவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருந்தது. சிலர் தயாரிப்பு நிறுவனமே திரையரங்குகளில் சாமி ஆடுவதற்காக ஆட்களை அனுப்பியிருக்கலாம் என்று பேசினார்கள். ஆனால் அப்படி செய்வதற்கே எங்களால் இவ்வளவு பெரிய செலவு செய்ய முடியாது. மக்கள் தங்களுடைய படமாக நினைத்து கொண்டாடுவதுதான் இந்தப் படத்தின் மிகப்பெரிய சிறப்பாக மாறியுள்ளது” என்று கூறியுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading