இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் தற்போது ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், அதன் தொடர்ச்சியாக உருவாகி வரும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. முதல் பாகத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, சிவராஜ்குமார் மற்றும் மோகன்லால் ஆகியோர் இந்த இரண்டாம் பாகத்திலும் முக்கிய கதாபாத்திரங்களில் மீண்டும் நடித்துவருகின்றனர்.
அதேபோல் இந்த புதிய பாகத்தில் நடிகர்கள் எஸ்.ஜே. சூர்யா, வித்யா பாலன், மிதுன் சக்கரவர்த்தி மற்றும் சந்தானம் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்துள்ளனர். இதனால் இந்த திரைப்படம் மேலும் பிரம்மாண்டமான நட்சத்திர பட்டாளத்துடன் உருவாகி வருகிறது. மேலும் ‘ஜெயிலர் 2’ திரைப்படம் வரும் செப்டம்பர் மாதத்தில் திரையரங்குகளில் வெளியாகும் என்பது தற்போது உறுதியாகியுள்ளது.
இதற்கிடையில், இந்திய சினிமாவில் பெரும்பாலான திரைப்படங்கள் ஐமேக்ஸ் வடிவத்தில் வெளியிடப்பட வேண்டுமெனில், படப்பிடிப்பு முடிந்த பின்னர் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளின் போது தான் அந்த தரத்திற்கு மாற்றப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தை உருவாக்கும் போதே பல முக்கியமான காட்சிகள் நேரடியாக ஐமேக்ஸ் தரத்தில் படமாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் இந்த படம் தொழில்நுட்ப ரீதியாகவும் மிகப்பெரிய அனுபவத்தை வழங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
