ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா மற்றும் நடிகை திரிஷா இணைந்து நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது. உலகளவில் ரூ.207 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படும் இந்த திரைப்படத்தின் வெற்றியை முன்னிட்டு, சென்னையில் நடைபெற்ற ரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நடிகர் சூர்யா கலந்துகொண்டு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், “இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அரைமணி நேரத்தில் முடிவு செய்யப்பட்ட படம் தான் ‘கருப்பு’. இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ஆர்.ஜே. பாலாஜியின் பார்வையில் உருவானது. அவர் இந்த கதையை சொன்ன தருணத்திலேயே இது திரையரங்குகளில் வித்தியாசமான அனுபவத்தை தரும் என்ற நம்பிக்கை எனக்குள் இருந்தது. இந்த படத்தில் எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகளும் சரியாக அமைய காரணமாக இருந்த கருப்பசாமிக்கே நாங்கள் நன்றி சொல்ல வேண்டும். நாங்கள் ஆசைப்பட்ட வெற்றி இது தான், ஆனால் இந்த அளவுக்கு மக்கள் அன்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. சமீப காலங்களில் திரையரங்குகளில் இப்படியான ரியாக்ஷனை நான் பார்த்ததே இல்லை” என்று கூறினார்.
மேலும், “தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, ஆந்திரா, அயர்லாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட பல வெளிநாடுகளிலும் இப்படத்திற்கு ஒரே மாதிரியான வரவேற்பு கிடைப்பது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. எந்த படத்திற்கும் விமர்சனங்கள் இருக்கும். ஆனால் இந்த படத்திற்கு எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியான அன்பு கிடைத்திருக்கிறது. அதற்காக அனைவருக்கும் மனமார்ந்த நன்றி” என்றும் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில், “படத்தை தாண்டி கருப்பசாமிக்காக ஒரு பாடல் இருக்க வேண்டும் என்று என்னுடன் இருந்த குமார் கூறினார். அவர் சொன்ன அந்த யோசனைதான் கிளைமாக்ஸ் பாடலாக உருவானது. படத்தின் எடிட்டிங் முடிந்து ஐந்து மாதங்களுக்கு பிறகு தான் அந்த ‘கருப்பு’ பாடலை உருவாக்கினோம். இந்த படத்திற்கு என்ன தேவையோ அதை முழுமையாக செய்ய வேண்டும் என்று அனைவரும் ஒன்றாக நினைத்ததன் விளைவுதான் இன்று இந்த வெற்றியை பார்க்க முடிகிறது. மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்தி பார்க்கிறதுதான் உண்மையான சந்தோஷம்” என்று உருக்கமாக தெரிவித்தார்.
இறுதியாக, “குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்பமாக திரையரங்குகளுக்கு வந்து ஹவுஸ்புல் போர்டுகளுடன் புகைப்படங்கள் எடுத்து பகிர்வது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. இந்த திரைப்படத்தை மக்களிடம் கொண்டு சென்ற அனைவருக்கும் மீண்டும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று நடிகர் சூர்யா கூறினார்.
