நடிகையாக தனி அடையாளத்தை பெற எனக்கு ஆசை – நடிகை சம்யுக்தா விஸ்வநாதன்!

அவ்னி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள திரைப்படம் ‘டபுள் ஆக்குபன்சி’. இந்த படத்தை அஷ்வின் கந்தசாமி இயக்கியுள்ளார். இதில் சந்தோஷ், ரேஷ்மா வெங்கடேஷ், சம்யுக்தா விஸ்வநாதன் மற்றும் வினோத் கிஷன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், படம் குறித்து நடிகை சம்யுக்தா விஸ்வநாதன் தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், “சாய் அபயங்கரின் ‘கட்சி சேர…’ இசை ஆல்பம் 2023-ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அந்த ஆல்பத்தின் மூலம் நான் ஆடிய நடனம் ரசிகர்களிடையே பெரிதும் பேசப்பட்டது. ஆனால் அதன் பிறகு எனக்கு வந்த வாய்ப்புகள் பெரும்பாலும் இசை ஆல்பங்கள் மற்றும் குறும்படங்களாகத்தான் இருந்தன. எனக்கு ஆரம்பத்திலிருந்தே சினிமாவில் நடிகையாக நடிக்க வேண்டும் என்பதுதான் ஆசை. கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து நடித்துக்கொண்டே இருக்கிறேன். ஆனால் நான் நடித்த பல படங்கள் இன்னும் வெளியாகாமல் உள்ளன. அவை விரைவில் ஒவ்வொன்றாக வெளியாகும் என்று நம்புகிறேன்” என்றார்.

மேலும் அவர் கூறுகையில், “இப்போது ரசிகர்கள் என்னை ஒரு நடனக் கலைஞராகத்தான் அதிகமாக பார்க்கிறார்கள். ஆனால் ‘டபுள் ஆக்குபன்சி’ படம் வெளியான பிறகு, நான் ஒரு நல்ல நடிகை என்றும் ரசிகர்கள் பேசுவார்கள் என்று நம்புகிறேன். நடனக் கலைஞர் என்ற அடையாளத்தை தாண்டி, ஒரு நடிகை என்ற அடையாளத்தை உருவாக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்” என்று தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து நடிகர் சந்தோஷும் படம் குறித்து தனது கருத்தை பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், “நான் ஏற்கனவே ஓரிரு படங்களில் நடித்திருந்தாலும், ‘டபுள் ஆக்குபன்சி’ திரைப்படம் எனக்கு நல்ல பெயரையும், ஒரு தனி அடையாளத்தையும் பெற்றுத்தரும் என்று நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading