காதல் பிரேக்அப் குறித்து மனம் திறந்த‌ நடிகை அனன்யா நாகல்லா!

தெலுங்கு திரையுலகில் மிகக் குறுகிய காலத்திலேயே தனக்கென ஒரு தனித்துவமான இடத்தை உருவாக்கியுள்ள இளம் நடிகை அனன்யா நாகல்லா, சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது காதல் முறிவு குறித்து மிகவும் உருக்கமாக பேசியுள்ளார். அவரது இந்த மனம் திறந்த பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. தெலுங்கானா மாநிலத்தின் கம்மம் மாவட்டம் சத்துப்பள்ளி பகுதியைச் சேர்ந்த அனன்யா நாகல்லா, சினிமாவிற்கு வருவதற்கு முன்பு மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்தவர். பின்னர் நடிப்பின் மீது இருந்த ஆர்வம் காரணமாக குறும்படங்களில் நடிக்க தொடங்கிய அவர், அதன் மூலம் கிடைத்த வாய்ப்பில் ‘மல்லேஷம்’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார்.

அதன்பிறகு ‘வக்கீல் சாப்’, ‘பிளேபேக்’, ‘மேஸ்ட்ரோ’, ‘சாகுந்தலம்’, ‘தந்த்ரா’, ‘பொட்டேல்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தற்போது பல படங்களில் பிஸியாக நடித்துவரும் அனன்யாவிடம், “சமீபத்தில் எதற்காகவாவது நீங்கள் அழுதிருக்கிறீர்களா?” என்று பேட்டியாளர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த கேள்விக்கு பதிலளிக்கும் போது அனன்யா மிகவும் உணர்ச்சிவசப்பட்டார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “பல வருடங்களுக்கு பிறகு நான் ஒருவருக்காக மிகவும் அழுதேன். அதை காதல் தோல்வி என்று நான் சொல்ல விரும்பவில்லை. ஆனால், நான் ஒருவரை முழுமையாக நம்பினேன். அவர் என்னை ஏமாற்றிவிட்டார். இன்று வரை அந்த நினைவுகள் என்னை விட்டு செல்லவில்லை. காலையில் கண் விழிக்கும் தருணத்திலேயே அந்த நினைவுகள் என்னை வாட்டுகின்றன. நான் எவ்வளவு வேலைப்பளுவில் இருந்தாலும் அந்த வலி மீண்டும் வந்து என்னை தாக்குகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த பிரேக்அப் வேதனையை அனுபவித்து வருகிறேன்” என்று உருக்கமாக தெரிவித்துள்ளார். அனன்யாவின் இந்த மனதை உருக்கும் பேச்சு ரசிகர்களிடையே பெரும் கவனத்தை பெற்றுள்ளதுடன், சமூக வலைதளங்களில் பலரும் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading