‘பூ’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான மலையாள நடிகை பார்வதி திருவோத்து, கடந்த 2024ஆம் ஆண்டு வெளியான ‘தங்கலான்’ திரைப்படத்தில் தனது வலுவான மற்றும் உணர்ச்சிப்பூர்வமான நடிப்பால் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தார். 17 ஆண்டுகளுக்கும் மேலாக நீளும் தனது சினிமா பயணத்தில், தமிழில் குறைந்த எண்ணிக்கையிலான படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், மலையாள திரையுலகில் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் தரமான திரைப்படங்களை தேர்வு செய்து தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளார்.
சினிமாவில் நடிப்பதோடு மட்டுமல்லாமல், திரைப்படத் துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள், பாலின சமத்துவம் மற்றும் சமூக பிரச்சினைகள் குறித்து தொடர்ந்து தனது கருத்துக்களை வெளிப்படையாக பதிவு செய்து வரும் பார்வதி, தற்போது பெண்களின் நிலைமை குறித்து பேசியுள்ள கருத்துகள் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அவர் கூறுகையில், “நாம் எல்லாவற்றையும் சரியாக செய்து, சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி, நம்முடைய படங்கள் சூப்பர் ஹிட் ஆனால், நம்முடைய திறமைக்குத்தான் இந்த துறையில் மதிப்பு கிடைக்கும் என்று நான் உண்மையாக நம்பினேன். என்னால் நல்ல நடிப்பையும், பாக்ஸ் ஆபீஸ் வெற்றியையும் இரண்டையும் கொடுக்க முடிகிறது. அப்படியிருக்கும்போது, நான் ஏன் இந்தத் துறையில் ஓரங்கட்டப்படுகிறேன் என்று பலமுறை என்னையே நான் கேள்வி கேட்டுக்கொண்டேன்” என்று தெரிவித்தார்.
மேலும் அவர் வேதனையுடன் பேசுகையில், “அப்போதுதான் எனக்கு ஒரு விஷயம் புரிந்தது. இந்த சினிமா அமைப்பைப் பொறுத்தவரை, பெண்கள் எப்போதுமே தேவையற்றவர்களாகவே பார்க்கப்படுகிறார்கள் என்பதுதான் அடிப்படை உண்மை. நீங்கள் எவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டாராக இருந்தாலும், எவ்வளவு வசூல் செய்து கொடுத்தாலும், நீங்கள் பேசும் உண்மைகள் சிலருக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தினால், உங்களை மிக எளிதாக இந்த அமைப்பில் இருந்து வெளியேற்றிவிடுவார்கள்” என்று மனவேதனையுடன் தெரிவித்துள்ளார்.
—
