திரைத்துறையின் பிரச்சனைகளுக்கு தீர்வு தேவை – அமைச்சர் ராஜ்மோகனிடம் சேரன் வேண்டுகோள்!

தென்னிந்திய திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர் யூனியனின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா சென்னையில் நடைபெற்றது. தேர்தலில் வெற்றி பெற்ற தலைவர் யுவராஜ் மற்றும் புதிய நிர்வாகிகள் விழாவில் பொறுப்பேற்றனர். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜ்மோகன், இயக்குநர்கள் சேரன், ஆர்.கே. செல்வமணி, தயாரிப்பாளர் சிவா, சவுந்தர்யா ரஜினிகாந்த், நடிகர்கள் ரவி மரியா, அர்ஜூன்தாஸ், அசோக் செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய இயக்குநர் சேரன், திரைத்துறையில் நிலவும் சிக்கல்கள் குறித்து கவலை வெளியிட்டார். “வெளியில் நாங்கள் சிரித்துக்கொண்டே இருப்போம். ஆனால் வீட்டுக்கு சென்ற பிறகு ஒவ்வொருவரும் பல பிரச்சனைகளுடன் வாழ்கிறோம்,” என்றார். ஒரு தயாரிப்பாளர் படம் எடுத்த பிறகு அதை வெளியிடுவதற்கே ஏராளமான தடைகள் இருப்பதாகவும், ஒரு இயக்குநர் படம் முடிக்கும் வரை பல சிரமங்களை சந்திக்க வேண்டியிருப்பதாகவும் அவர் கூறினார்.

திரைத்துறையை நன்கு புரிந்த ஒருவரை அமைச்சராக நியமித்ததற்காக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த சேரன், “இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணக்கூடிய நிலைமை அவர்களிடம் உள்ளது. முந்தைய ஆட்சிகளிலும் கோரிக்கைகள் வைத்தோம். சில நிறைவேறின, பல நிறைவேறவில்லை,” என்றார். இறுதியாக, “திரைத்துறையின் உண்மையான நிலையை புரிந்துகொண்டு பேசும் அரசு தற்போது இருப்பதாக நாங்கள் நம்புகிறோம். ஒரு சாதாரண இயக்குநராக நான் இந்த வேண்டுகோளை முன்வைக்கிறேன்,” என்று சேரன் உருக்கமாக தெரிவித்தார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading