இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடித்த ‘திரிஷ்யம்’ திரைப்படம் மலையாள சினிமாவில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற படமாக அமைந்தது. இதன் முதல் மற்றும் இரண்டாம் பாகங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது ‘திரிஷ்யம் 3’ திரைப்படம் உருவாகி வெளியாகியுள்ளது. நேற்று திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்த படத்தில் மோகன்லாலுடன் மீனா மற்றும் எஸ்தர் அனில் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கேரளாவில் மட்டுமின்றி, வெளிமாநிலங்களிலும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ‘திரிஷ்யம்’ தொடரின் மீது ரசிகர்கள் கொண்டிருக்கும் எதிர்பார்ப்பை இந்த மூன்றாம் பாகமும் பூர்த்தி செய்துள்ளதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகர் மோகன்லால் தனது ‘எக்ஸ்’ சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில் அவர் கூறியிருப்பதாவது, “மிகுந்த அன்பும் நன்றியுணர்வும் கலந்த மனதுடன் ‘திரிஷ்யம் 3’ உருவாக்கப்பட்டது. அதற்கு நீங்கள் அளித்து வரும் பேராதரவு என்னை மிகவும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது. பாக்ஸ் ஆபீஸ் வசூலைவிட, உங்கள் விமர்சனங்களும் உணர்ச்சிகளும் எனக்கு மிகவும் மதிப்புமிக்கவை. ஜார்ஜ்குட்டியையும் அவரது குடும்பத்தையும் உங்கள் குடும்பமாக ஏற்றுக்கொண்டதற்கு மனமார்ந்த நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.
—
