ஹாலிவுட்டின் பிரபல சாகசத் திரைப்படத் தொடரான ‘ஜுமாஞ்சி’ புதிய பாகத்துடன் மீண்டும் திரைக்கு வருகிறது. ‘ஜுமாஞ்சி: ஓபன் வேர்ல்டு’ என்ற பெயரில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
டுவெய்ன் ஜான்சன், கெவின் ஹார்ட், ஜாக் பிளாக், கரேன் கில்லன் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் இந்தப் படத்திலும் மீண்டும் இணைந்துள்ளனர். முந்தைய ஜுமாஞ்சி படங்களை இயக்கிய ஜேக் காஸ்டனே இந்தப் படத்தையும் இயக்கியுள்ளார்.
‘ஒன் லாஸ்ட் கேம்’ என்ற வாசகத்துடன் வெளியான டிரெய்லர், முந்தைய பாகங்களை விட வித்தியாசமான கதைக்களத்தை வெளிப்படுத்துகிறது. இதுவரை கதாபாத்திரங்கள் ஜுமாஞ்சி விளையாட்டு உலகிற்குள் செல்வதை பார்த்த ரசிகர்கள், இந்த முறை ஜுமாஞ்சி உலகமே நிஜ உலகிற்குள் நுழைந்து குழப்பத்தை ஏற்படுத்துவதை காணவிருக்கிறார்கள்.
இந்தப் படம் நவீன ஜுமாஞ்சி தொடரின் இறுதிப் பகுதியாக உருவாகி வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 25-ஆம் தேதி உலகம் முழுவதும் படம் வெளியாக உள்ளது. அதே நேரத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ‘கிங்’ திரைப்படமும் வெளியாக இருப்பதால், சர்வதேச பாக்ஸ் ஆபிஸில் இந்த இரண்டு பெரிய படங்களுக்கும் கடும் போட்டி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
