ஜூனியர் என்டிஆர் மற்றும் இயக்குநர் பிரசாந்த் நீல் கூட்டணியில் உருவாகி வரும் புதிய திரைப்படத்தின் கிளிம்ஸ் வீடியோ தற்போது வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. ‘கே.ஜி.எஃப்’ மற்றும் ‘சலார்’ போன்ற பிரம்மாண்ட வெற்றிப் படங்களை இயக்கிய பிரசாந்த் நீல், அடுத்ததாக ‘சலார் 2’ திரைப்படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது ஜூனியர் என்டிஆருடன் இணைந்து புதிய படத்தை உருவாக்கி வருகிறார்.
பிரசாந்த் நீலின் முந்தைய திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வசூல் சாதனைகள் படைத்ததால், இந்த புதிய திரைப்படத்தின் மீதும் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்.டி.ஆர் ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படம் ஆரம்பத்தில் 2026 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட தகவலின்படி, இப்படம் ஒரு ஆண்டு தாமதமாக 2027 ஆம் ஆண்டு ஜூன் 11 ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்த நிலையில், ‘டிராகன்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் கிளிம்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. ஆரம்பத்தில் ஜூனியர் என்டிஆர் கதாநாயகனாக மட்டும் தோன்றுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், இந்த திரைப்படத்தில் இடம்பெறும் அனைத்து கதாபாத்திரங்களும் வில்லத்தனமான குணாதிசயங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, ஓபியம் மூலமாக பரவிய போதைப்பொருள் மாஃபியாவின் எழுச்சி மற்றும் வீழ்ச்சியை மையமாகக் கொண்டு கதை உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது வெளியாகியுள்ள கிளிம்ஸ் காட்சிகள், ரசிகர்களிடையே திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளன.
