‘சேயோன்’ படத்திற்காக ஒட்டுமொத்த படக்குழுவும் உழைக்க தயார் – சிவகார்த்திகேயன் டாக்!

கமல்ஹாசனின் RKFI நிறுவனம் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் ‘சேயோன்’. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக், சிவகார்த்திகேயனின் பிறந்தநாளான பிப்ரவரி 17ஆம் தேதி வெளியிடப்பட்டது. சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான ‘பராசக்தி’ திரைப்படத்திற்கு பிறகு, சிவகார்த்திகேயன் அடுத்ததாக எந்த இயக்குநருடன் இணையப் போகிறார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், ‘தாய் கிழவி’ என்ற மெகா ஹிட் திரைப்படத்தை இயக்கிய சிவக்குமார் முருகேசன், சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்குகிறார் என்பது ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில், இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மதுரையைச் சேர்ந்த உசிலம்பட்டி, செக்கானூரணி, கருமாத்தூர் உள்ளிட்ட பகுதிகளை மையமாகக் கொண்டு இந்த படத்தின் கதை அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த திரைப்படத்தில் சாமியாடி கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருப்பது போல் வெளியிடப்பட்ட ப்ரோமோவில் காட்டப்பட்டிருந்தது. தற்போது படப்பிடிப்பும் அதே பகுதிகளில் தொடங்கப்பட உள்ளது.

இதற்காக இன்று மதுரை சென்றிருந்த சிவகார்த்திகேயன் அங்குள்ள செய்தியாளர்களிடம் பேசுகையில், “ ‘சேயோன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது. இது ஒரு சிறப்பான திரைப்படமாக இருக்கும். அதற்கான முழு உழைப்பையும் கொடுக்க முழு குழுவும் தயாராக இருக்கிறது. நம்ம ஊர் பக்கம் வந்து, நம்ம ஊர் கதையை மையமாக வைத்து படம் செய்வது ரொம்ப நாள்களுக்கு பிறகு நடக்கிறது. அதையும் ‘தாய் கிழவி’ இயக்குநருடன் செய்வது இன்னும் கூடுதல் மகிழ்ச்சியாக உள்ளது. மதுரைக்கு ஒரு தனி பவர் இருக்கிறது. அந்த பவர் குறையாமல் இந்த படம் உருவாகும்” என்று தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள், “இந்த படம் ‘விருமாண்டி’ போல இருக்குமா?” என்று கேள்வி எழுப்பியபோது, “அந்த மாதிரி எடுக்க நினைக்கவில்லை. ஆனால், அந்த படத்தில் எல்லோருக்கும் பிடித்த ஒரு தனித்துவம் இருந்தது போல, அதுபோன்ற உணர்வுடன் இந்த படத்தையும் உருவாக்க முயற்சி செய்கிறோம் என்று பதிலளித்தார். இறுதியாக, முதல்வர் விஜய்யின் ஆட்சி எப்படி இருக்கிறது? என்ற கேள்விக்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், “எங்களுடைய துறையிலிருந்து ஒருவர் முதல்வராக இருப்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். விஜய் சார் வெற்றி பெற்ற உடனே அவருக்கு போன் செய்து பேசினேன். எப்போதும் போல அமைதியாக பேசினார், வாழ்த்துக்களையும் பெற்றுக்கொண்டார். அவர் எதை எடுத்தாலும் சிறப்பாக செய்வார். இதுவும் அப்படியே இருக்கும் என்று நம்புகிறோம்” என்று கூறினார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading