ராம் சரண், ஜான்வி கபூர், சிவராஜ்குமார், திவ்யந்து, ஜெகபதிபாபு, பொம்மன் இராணி உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘பெத்தி’. இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ராம் சரண், “கடந்த இரண்டு ஆண்டுகள் எங்களுக்கெல்லாம் மிகவும் விசேஷமான அனுபவமாக அமைந்துள்ளது. இந்த படம் எங்களின் வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டது. இந்த கதையோடு வாழ்ந்து, சுவாசித்து வந்திருக்கிறோம். குறிப்பாக இயக்குநர் புச்சி பாபு இந்த கதையுடன் கடந்த ஐந்து ஆண்டுகளாக பயணித்து வருகிறார். அதேபோல், இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க சம்மதிக்க வைத்ததற்காக அவருக்கு நான் மனதார நன்றி தெரிவிக்கிறேன்.
ஒவ்வொரு திரைப்படத்திற்கும் சில முக்கியமான தூண்கள் இருக்கும். ஆனால் இந்த படத்தின் மிக முக்கியமான மையத் தூணாக ரஹ்மான் சார் இருக்கிறார். அவர் ஏற்கனவே பல அற்புதமான படங்களில் தனது இசை மூலம் தனித்துவத்தை நிரூபித்துள்ளார். குறிப்பாக அவரது ‘Pele’ திரைப்படத்தின் பின்னணி இசை எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. இப்படத்தில் அவர் இணைந்திருப்பது எங்களுக்கு பெருமையாக இருக்கிறது.
மேலும் ஜான்வி கபூரைப் பற்றி பேசும்போது, அவரைப் போன்ற அர்ப்பணிப்பும் கடின உழைப்பும் கொண்ட நடிகையை நான் இதுவரை பார்த்ததில்லை. கடைசி பாடலுக்காக அவர் மிகவும் தீவிரமாக பயிற்சி செய்தார். தொடர்ந்து 85 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்ற பிறகுதான் அந்த பாடல் படமாக்கப்பட்டது. அந்த நேரத்தில் ஜான்வி ஆடிய நடனத்தை பார்த்து நான் உண்மையாகவே ஆச்சரியப்பட்டேன். என்னைவிட நூறு மடங்கு சிறப்பாக அவர் நடனமாடினார். மும்பையில் அமைதியாக இருந்து அவர் செய்த பயிற்சியும் அர்ப்பணிப்பும் என்னை மிகவும் கவர்ந்தது. என் தந்தையும், நடிகை ஸ்ரீதேவியும் பல திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளனர். அதனால் நாங்களும் ஒருநாள் இணைந்து நடிக்க வேண்டும் என்பது நீண்டநாள் ஆசையாக இருந்தது. இந்த ஜோடி ரசிகர்களை ஒருபோதும் ஏமாற்றாது என நம்புகிறேன். மேலும் இப்படியான ஒரு பெரிய படத்தை உருவாக்குவதற்கான பாதையை அமைத்த அமீர்கான் மற்றும் சல்மான் கானுக்கு நன்றி. அவர்களின் ‘டங்கல்’, ‘சுல்தான்’ போன்ற படங்கள் எங்களுக்கு மிகப்பெரிய ஊக்கமாக இருந்தது” என்று தெரிவித்தார்.
