ராகவா லாரன்ஸ் – அஜய் ஞானமுத்து கூட்டணியில் உருவாகும் பிரம்மாண்டமான பேண்டஸி ஹாரர் திரைப்படம்?

தமிழ் சினிமாவில் ஹாரர்-காமெடி திரைப்படங்களின் முக்கிய முகமாக அறியப்படும் ராகவா லாரன்ஸும், விறுவிறுப்பான ஹாரர் த்ரில்லர் படங்களை இயக்குவதில் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ள இயக்குநர் அஜய் ஞானமுத்துவும் இணைந்து புதிய பிரம்மாண்ட பேண்டஸி ஹாரர் திரைப்படம் ஒன்றை உருவாக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் பேய் திரைப்படங்களுக்கு எப்போதும் தனி ரசிகர் வட்டாரம் இருந்து வருகிறது.தற்போது ராகவா லாரன்ஸ், தனது தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகி வரும் காஞ்சனா 4 திரைப்படத்தின் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே மற்றும் நோரா ஃபதேகி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். மேலும், காஞ்சனா திரைப்பட வரிசையின் இறுதிப் படமாக இது அமையும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேபோல், இயக்குநர் அஜய் ஞானமுத்து, நடிகர் அருள்நிதி நடித்துள்ள டிமான்டி காலனி 3 திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகளை நிறைவு செய்துள்ளார். இந்த இரண்டு பெரிய திரைப்படங்களின் வெளியீட்டிற்குப் பிறகு, லாரன்ஸ் – அஜய் ஞானமுத்து கூட்டணியில் உருவாகும் புதிய மெகா பட்ஜெட் பேண்டஸி ஹாரர் திரைப்படத்தின் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக தொடங்கும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வழக்கமாக ராகவா லாரன்ஸ் திரைப்படங்களில் நகைச்சுவை மற்றும் மாஸ் அம்சங்கள் அதிகமாக இடம்பெறும். அதேசமயம் அஜய் ஞானமுத்துவின் படங்களில் பயம், மர்மம் மற்றும் விறுவிறுப்பான திரைக்கதை முக்கிய பங்காற்றும். தற்போது இந்த இருவரும் இணைவதால், காஞ்சனா பாணியிலான மாஸ் தருணங்களும், டிமான்டி காலனி பாணியிலான பதற்றமான ஹாரர் அம்சங்களும் இணைந்து ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் தயாரிப்பு நிறுவனம் குறித்த தகவல்களும் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading