இசையமைப்பாளராக தமிழ் திரையுலகில் அறிமுகமாகி, பின்னர் நடிகராகவும் தனக்கென தனித்துவமான அடையாளத்தை உருவாக்கியவர் விஜய் ஆண்டனி. தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் அவர், தற்போது ‘பிச்சைக்காரன்’ திரைப்பட இயக்குநர் சசியுடன் மீண்டும் இணைந்து ‘நூறு சாமி’ திரைப்படத்தில் நடித்துள்ளார். பிச்சைக்காரன் திரைப்படத்திற்குப் பிறகு இந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்த திரைப்படத்தில் விஜய் ஆண்டனியுடன் அஜய் திஷான், சுவாசிகா, லிஜோ மோல் ஜோஸ், கருணாஸ் மற்றும் காவ்யா அனில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வருகிற 19ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் விளம்பர மற்றும் புரமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ‘நூறு சாமி’ திரைப்பட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் விஜய் ஆண்டனி, படம் குறித்தும் இயக்குநர் சசி குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார். அப்போது அவர் கூறுகையில், “என்னுடைய வாழ்க்கையில் மூன்று முக்கியமான மைல்கற்களை சசி சார் உருவாக்கித் தந்துள்ளார். முதலில் ‘டிஷ்யூம்’ திரைப்படத்தில் எனக்கு வாய்ப்பு கிடைக்க காரணமாக இருந்தார். இரண்டாவதாக ‘பிச்சைக்காரன்’ திரைப்படம் என் திரைப்பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. மூன்றாவதாக, என்னை ஒரு காதல் கதாநாயகனாக ரசிகர்களிடம் கொண்டு சென்றவரும் அவர்தான். பெண்களுக்கான மிகவும் முக்கியமான திரைப்படமாக ‘நூறு சாமி’ அமையும். சமூகத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய கருத்துகளை கொண்ட இந்த திரைப்படத்தை குடும்பத்துடன் வந்து பாருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
