இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் ஜெயராம் மற்றும் ஊர்வசி இணைந்து நடித்துள்ள புதிய திரைப்படம் ‘பரிமளா அண்ட் கோ’. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த படத்தின் மூலம் ஜெயராமும் ஊர்வசியும் மீண்டும் திரையில் இணைந்துள்ளனர். முழுக்க முழுக்க நகைச்சுவை மற்றும் குடும்ப உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், சமீபத்திய பேட்டியில் நடிகை ஊர்வசியின் அர்ப்பணிப்பு குறித்து நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார் நடிகர் ஜெயராம்.
அவர் கூறுகையில், “இந்த படத்தின் கதையை இயக்குநர் என்னிடம் கூறியபோது, கதாநாயகியாக முடிந்தால் ஊர்வசியை நடிக்க வையுங்கள் என்று நான் கேட்டுக்கொண்டேன். அதற்கு அவர்கள், ‘ஊர்வசியை ஒப்பந்தம் செய்துவிட்டுத்தான் உங்களை சந்திக்க வந்திருக்கிறோம்’ என்று கூறினார்கள். அந்த அளவிற்கு அந்த கதாபாத்திரம் அவருக்காகவே எழுதப்பட்டதாக இருந்தது. ஒரு நாள் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தபோது, மாலை நேரத்தில் அவரது சகோதரர் கமல்ராய் மறைந்துவிட்டதாக தகவல் வந்தது. அதை கேட்டதும் அவர் மிகவும் அதிர்ச்சி அடைந்தார். அதே மாலையே கோவையிலிருந்து கேரளா சென்று தனது சகோதரரின் இறுதி சடங்குகளில் கலந்துகொண்டார்.
ஆனால், ‘என்னால் படப்பிடிப்பு தடைபடக்கூடாது’ என்று கூறிய அவர், மறுநாள் மாலையே மீண்டும் விமானத்தில் வந்து நேராக படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அந்த நாளில் அவருக்காக திட்டமிடப்பட்டிருந்தது முழுக்க முழுக்க நகைச்சுவை நிறைந்த காட்சி. அந்த மனநிலையிலும் அவரை மெதுவாக ஆறுதல் கூறி, துக்கத்திலிருந்து வெளியே கொண்டு வந்து அந்த காட்சியில் நடிக்க தயார் செய்தோம். அவரும் தனது தனிப்பட்ட துயரத்தை மறைத்து வைத்து, ஒரு திறமையான நடிகையாக அந்த காட்சியில் அற்புதமாக நடித்தார். நடிப்பின் மீது உண்மையான அர்ப்பணிப்பு கொண்டவரால் மட்டுமே இப்படிப்பட்ட விஷயங்களை செய்ய முடியும்” என்று உணர்ச்சியுடன் தெரிவித்துள்ளார் ஜெயராம்.
