நடிகர் யாஷ் தற்போது மலையாள திரையுலகின் முன்னணி இயக்குநரும் நடிகையுமான கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். கேவிஎன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படம் கேங்ஸ்டர் நாடகக் கதைக்களத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. இதில் நயன்தாரா, ருக்மணி வசந்த், கியாரா அத்வானி, ஹுமா குரேஷி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
1940 முதல் 1970 வரையிலான காலகட்டத்தில் கோவா பகுதியில் நிலவிய போதைப்பொருள் கடத்தல் மற்றும் மாபியா கும்பல்களின் பின்னணியை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் இந்த திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சமீபத்தில் இயக்குநர் கீது மோகன்தாஸின் பிறந்தநாளை முன்னிட்டு, படத்தின் பிரத்யேக காணொலி ஒன்றை படக்குழு வெளியிட்டது. முதலில் இந்த திரைப்படம் கடந்த மார்ச் 19ஆம் தேதி வெளியாகும் என்று திட்டமிடப்பட்டிருந்தது. பின்னர் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவிய போர் சூழ்நிலை காரணமாக வெளியீட்டு தேதி மாற்றப்பட்டு கடந்த 4ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த தேதியிலும் படம் வெளியாகாமல் மீண்டும் தள்ளிவைக்கப்பட்டது. இந்த சூழலில் படத்தின் வெளியீடு குறித்து பேசிய இயக்குநர் கீது மோகன்தாஸ், “மிகப்பெரிய கனவுடன் உருவாகி வரும் இந்த திரைப்படத்திற்காக ஒரு பிரம்மாண்டமான படக்குழுவை நம்பிக்கையுடனும் துல்லியத்துடனும் வழிநடத்தி வருகிறோம். இந்த திரைப்படத்தில் வசனங்கள் மட்டுமல்ல, மவுனமும் பல உணர்வுகளை உரக்க பேசும். மிக விரைவில் ரசிகர்களுக்கு நல்ல செய்தி ஒன்றை அறிவிப்போம். அவர்களுக்காக ஒரு சிறப்பான திரை விருந்து காத்திருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
—
