ராம் சரண், ஜான்வி கபூர், சிவராஜ்குமார், திவ்யந்து, ஜெகபதிபாபு, பொம்மன் இராணி உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘பெத்தி’. இந்த திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டு பேசுகையில், “நான் தமிழ் சினிமாவில் தான் என்னுடைய இசைப் பயணத்தை தொடங்கினேன். அதன் பிறகு தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் என் படங்கள் டப்பிங் செய்யப்பட்டு சென்றன. ஆனால், தெலுங்கு சினிமாவிற்கு நேரடியாக மீண்டும் வர ஒரு நல்ல திரைப்படத்துக்காக காத்திருந்தேன். அது இந்த ‘பெத்தி’ திரைப்படமாக அமைந்துவிட்டது. நிறைய பேர் என்னை தெலுங்கு திரைப்படங்களுக்கு அழைத்திருந்தார்கள். ஆனால், இயக்குநர் புச்சி கூறிய கதையை கேட்ட உடனே, இதுதான் என்னுடைய முதல் தெலுங்கு திரைப்படம் போல உணர்ந்தேன்” என்று கூறினார்.
மேலும் அவர் பேசுகையில், “இப்போதுதான் எல்லாமே தொடங்குகிறது. புச்சிக்கும் ராம் சரணுக்கும் நன்றி. நீங்கள் எந்த விஷயத்தையும் ஆழமாக எடுத்துக்கொண்டால், அது எல்லா கலைஞர்களிடமிருந்தும் சிறந்த திறமைகளை வெளிக்கொண்டு வரும். அதுதான் ஒரு சிறந்த திரைப்படமாக மாறுகிறது. வெற்றி, தோல்வி என்பதைக் கடந்த ஒன்று அது.
இந்த திரைப்படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமிலும் இயக்குநரின் உழைப்பு தெரிகிறது. கோவிட் காலத்தில் புச்சி துபாய்க்கு வந்தார். ‘சிக்கிரி’ பாடலுக்கான ட்யூன் தான் முதல் ட்யூன். அதை கேட்டவுடன் ‘இது நன்றாக இருக்கிறது’ என்று சொன்னார். அதன் பிறகு சென்னை, ஹைதராபாத் ஆகிய இடங்களில் தொடர்ந்து வேலை நடந்தது. இவர் பார்க்க அமைதியாக இருப்பார். ஆனால், உண்மையில் ரொம்ப டெரர். ‘வேறு ட்யூன் கொடுங்கள், வேறு பாடகரை மாற்றுங்கள்’ என்று தொடர்ந்து கேட்டு கொண்டே இருப்பார்” என்று சிரிப்புடன் பகிர்ந்துகொண்டார்.
