பாலிவுட் திரையுலகில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் சோனாக்சி சின்ஹா, தற்போதைய காலகட்டத்தில் சினிமா துறையில் சமூக ஊடகங்களின் தாக்கம் எந்த அளவுக்கு அதிகரித்துள்ளது என்பது குறித்து வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார்.
தற்போது சோனாக்சி சின்ஹா நடித்துள்ள ‘சிஸ்டம்’ திரைப்படம் நீதிமன்ற பின்னணியை மையமாகக் கொண்ட கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இந்த திரைப்படம் வரும் 22ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இதையடுத்து சமீபத்தில் அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: “இப்போது சினிமாவில் முழுமையான உண்மைகளை பேச முயற்சி செய்தாலே அந்த படத்திற்கு பல்வேறு தடைகள் உருவாகின்றன. அதனால் கதைகளை தேர்வு செய்வதிலும், உண்மைகளை வெளிப்படுத்துவதிலும் திரைப்பட படைப்பாளிகள் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. முன்பு இருந்த சுதந்திரமான சூழல் தற்போது இல்லை. படைப்பாளிகளுக்கு இது மிகவும் சவாலான காலமாக மாறியுள்ளது.
கடந்த 2010ஆம் ஆண்டு ‘தபாங்’ திரைப்படத்தின் மூலம் நான் அறிமுகமான போது இருந்த திரையுலக சூழ்நிலை தற்போது முழுமையாக மாறிவிட்டது. அப்போது சமூக ஊடகங்கள் இருந்தாலும், இப்போது அதன் தாக்கம் பல மடங்கு அதிகரித்துள்ளது. அதனால் சினிமா துறையில் பணிபுரிவது இன்னும் சிரமமாகி விட்டது. நான் நடித்த சில திரைப்படங்கள் எனக்கு கெட்ட கனவாக அமைந்தது உண்மைதான். ஏனெனில் கதை சொல்லப்படும் போது ஒரு விதமாக இருக்கும், ஆனால் படமாக்கும்போது அது முற்றிலும் வேறு திசைக்கு மாறிவிடும். இருந்தாலும் நான் நடித்த எந்த படத்தையும் குறை கூற மாட்டேன். முழுமையான சுயநினைவுடன் தான் அந்த திரைப்படங்களில் நடித்தேன். வாழ்க்கையில் அனைவரும் தவறுகள் செய்வது இயல்பான விஷயம். அந்த தவறுகளை கடந்து முன்னேறிச் செல்ல வேண்டும்” என்று சோனாக்சி சின்ஹா தெரிவித்துள்ளார்.
