‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’, ‘இறைவி’, ‘மெர்குரி’, ‘பேட்ட’, ‘ஜகமே தந்திரம்’, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’, ‘மகான்’, ‘ரெட்ரோ’ உள்ளிட்ட பல வெற்றி திரைப்படங்களை இயக்கியவர் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். தனக்கென ஒரு தனித்துவமான திரைமொழியையும், வித்தியாசமான காட்சிப்படுத்தலையும் உருவாக்கியுள்ள இவர், ஒவ்வொரு படத்திலும் தனது கையொப்ப பாணியை வெளிப்படுத்தி ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வருகிறார். இவர் இயக்கிய ஒன்பது திரைப்படங்களில் ‘பேட்ட’ படத்திற்கு மட்டும் அனிருத் இசையமைத்திருந்தார். மீதமுள்ள எட்டு படங்களுக்கும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தற்போது அவர் இயக்கவுள்ள தனது 10வது திரைப்படத்திற்கு இசையமைப்பாளராக இளையராஜாவை ஒப்பந்தம் செய்துள்ளார். பிரபல பாலிவுட் தயாரிப்பு நிறுவனமான சீக்யா என்டர்டெயின்மென்டுடன் இணைந்து உருவாகும் இந்த திரைப்படம், கார்த்திக் சுப்புராஜ் மற்றும் இளையராஜா இணையும் முதல் படம் என்பதால் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக சமூக வலைதளத்தில் “கனவு 10, ஆசீர்வாதம் 1540” என்று குறிப்பிட்டு ஒரு சிறப்பு வீடியோவையும் கார்த்திக் சுப்புராஜ் பகிர்ந்துள்ளார். அதில், இது தனது 10வது திரைப்படம் என்றும், இளையராஜாவின் 1540வது திரைப்படம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புதிய படத்தின் தலைப்பு மற்றும் மற்ற முக்கிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
