‘காமராஜ்’, ‘வெல்கம் பேக் காந்தி’ போன்ற திரைப்படங்களை தயாரித்த ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், கடந்த ஆண்டு ‘திருக்குறள்’ திரைப்படத்தை தயாரித்து வெளியிட்டது. இந்த படத்தை இயக்குநர் ஏ.ஜே. பாலகிருஷ்ணன் இயக்கியிருந்தார். பல தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்ற இந்த திரைப்படம், இணையதளங்களில் வெளியாகி பல லட்சம் பார்வையாளர்களால் ரசிக்கப்பட்டது. இதன் வெற்றியை தொடர்ந்து, முதல் பாகத்தில் இடம்பெறாத பல முக்கியமான கருத்துக்களையும் வலியுறுத்தும் வகையில் தற்போது ‘திருக்குறள்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இது தொடர்பாக இயக்குநர் ஏ.ஜே. பாலகிருஷ்ணன் பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார்.
அவர் கூறுகையில், “இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் ரோம், கிரேக்கம் போன்ற மேற்கத்திய நாடுகளுடனும், சீனா, இந்தோனேசியா உள்ளிட்ட கிழக்காசிய நாடுகளுடனும் வணிக மற்றும் கலாசார தொடர்புகளை பேணியவர்கள். அந்த காலகட்டத்தில் தமிழர்களின் வாழ்க்கை முறை, சங்ககால நாகரிகம், வணிக வளர்ச்சி மற்றும் திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தில் இருந்த பல்வேறு ஆளுமைகள் ஆகியவற்றை இந்த படத்தில் விரிவாக காட்சிப்படுத்த உள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “சர்வதேச ரசிகர்களையும் கவரும் வகையில் ஹாலிவுட் கலைஞர்களின் பங்களிப்புடன், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தையும் இந்த படத்தில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம். உலகம் முழுவதும் தமிழ் பண்பாட்டின் பெருமையை திருக்குறள் வழியாக எடுத்துச் செல்ல வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். ஜூன் மாதத்தில் படப்பிடிப்பு துவங்கவுள்ள நிலையில், நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும். தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் உருவாகும் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரும்” என்றும் கூறியுள்ளார்.
