தமிழ் சினிமாவில் பல வெற்றி திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனி இடத்தை பிடித்தவர் நடிகை ஜோதிகா. நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோதிகாவுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து சிறிய இடைவெளி எடுத்திருந்த அவர், தற்போது பெண்களை மையமாகக் கொண்ட கதைகளில் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து தொடர்ந்து நடித்து வருகிறார்.
சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் ஜோதிகா கூறியதாவது:- “நான் சினிமாவை விட்டு விலகி இருந்த அந்த 8 ஆண்டுகளில் பெண்களை மையமாகக் கொண்ட கதைகள் அதிகமாக உருவாகவில்லை. அதன் பிறகு நான் ‘36 வயதினிலே’ திரைப்படத்தில் நடித்தேன். அதே காலகட்டத்தில் நயன்தாராவும் ‘மாயா’ திரைப்படத்தில் நடித்தார். அந்த இரண்டு படங்களுமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்றன.
‘36 வயதினிலே’ திரைப்படத்தின் மொத்த பட்ஜெட் வெறும் ரூ.5 கோடி மட்டுமே. அப்போது பெண்களை மையமாகக் கொண்ட கதைகளில் நாங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பது ஒரு பெரிய சவாலாக இருந்தது. ஏனெனில் அப்படிப்பட்ட படங்களுக்கு பெரிய அளவில் பட்ஜெட் ஒதுக்க தயாரிப்பாளர்கள் முன்வருவதில்லை. அதனால் அந்த காலத்தில் அந்த மாதிரியான கதைகளில் நடிப்பது எங்களுக்கு ஒரு அக்னி பரிட்சை போலவே இருந்தது” என்று ஜோதிகா தெரிவித்துள்ளார்.
