“ரஜினியைப் போல இனிமையான மனிதரை பார்த்ததே இல்லை!” – அஸ்வத் மாரிமுத்து நெகிழ்ச்சி

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘தர்மன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அஸ்வத் மாரிமுத்து இயக்கும் இப்படத்தில் ரஜினிகாந்த் மருத்துவர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இயக்குநர் ‘தர்மன்’ படம் மட்டுமின்றி, ரஜினிகாந்துடனான தனது அனுபவம் குறித்தும் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.

‘தர்மன்’ படப்பிடிப்பு அக்டோபர் மாதத்தில் நிறைவடையும் என்றும், அதன்பிறகு சிலம்பரசன் நடிக்கும் புதிய படத்தின் பணிகளை தொடங்க உள்ளதாகவும் அஸ்வத் மாரிமுத்து தெரிவித்துள்ளார். அந்தப் படத்தின் பெயரை தற்போது வெளியிட முடியாது என்றும், எஸ்டிஆர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதத்தில் தொடங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ரஜினிகாந்துடன் கடந்த இரண்டு மாதங்களாக பணியாற்றி வரும் அனுபவத்தைப் பற்றி பேசிய அவர், தன்னை மிகவும் கவர்ந்தது ரஜினியின் மனிதநேயம் என குறிப்பிட்டுள்ளார். இயக்குநருக்கு மரியாதை கொடுக்கும் விதமாக, சில சமயங்களில் தான் கடந்து செல்லும்போது கூட ரஜினிகாந்த் எழுந்து நிற்பார் என்றும், அது அவருடைய பணிவு மட்டுமல்லாமல் சினிமா தொழிலின் மீதான மரியாதையையும் வெளிப்படுத்துவதாக அஸ்வத் தெரிவித்துள்ளார்.

‘தர்மன்’ திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும் வகையில் உருவாகி வருவதாக நம்பிக்கை தெரிவித்துள்ள அவர், ரஜினிகாந்த் தனது இயல்பான ஸ்டைலில் படத்தில் இருப்பார் என்றும் கூறியுள்ளார். மேலும், கமல்ஹாசனுடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சியாக இருப்பதாகவும், இந்தப் படத்தை தனக்கு கிடைத்த வாய்ப்பாக மட்டும் கருதாமல் தன்னைப் போன்ற இயக்குநர்களின் கனவை நிறைவேற்றும் பொறுப்பாகவே பார்ப்பதாகவும் அஸ்வத் மாரிமுத்து தெரிவித்துள்ளார். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சிம்ரன், ராஷி கன்னா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading