நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தபோது, முதல்வர் விஜய்க்கு தனது வாழ்த்துகளை தெரிவித்ததுடன், “விஜய் முதல்வராகியதற்கு எனக்கு ஏன் பொறாமை வர வேண்டும்? ஒருவேளை கமல் முதல்வராகி இருந்தால் கூட பொறாமை வந்திருக்குமா ? என்று கலகலப்பாக பேசியிருந்தார். இந்த கருத்து சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த நிலையில், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் நடிகர் கமல்ஹாசனிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். மேலும், முதல்வர் விஜயின் தற்போதைய ஆட்சி குறித்தும் அவரிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கமல்ஹாசன் கூறியதாவது:- “முதல்வர் விஜய் அரசியலில் புதியவர். அவருக்கு குறைந்தது 6 மாதங்கள் அவகாசம் கொடுக்க வேண்டும். புதிதாக பொறுப்பேற்றவர்களை ஆரம்பத்திலேயே குறைத்து மதிப்பிடக்கூடாது. அதேசமயம் அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்புகளையும் மக்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அவருக்கு வாக்களித்த மக்களே அவர் எப்படி ஆட்சி செய்கிறார் என்பதை பொறுமையாக கவனிக்க வேண்டும்.
எனக்கும் ரஜினிக்கும் இடையே எப்போதுமே போட்டி இருந்தது உண்மைதான். ஆனால் ஒருபோதும் பொறாமை இருந்ததில்லை. எங்களுக்குள் இருக்கும் நட்பு சினிமா துறையில் உள்ள அனைவருக்கும் நன்றாக தெரியும். நாங்கள் இருவரும் கிரிக்கெட் விளையாடினாலும் கூட இதே நட்புணர்வுடன் தான் இருப்போம்” என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.கமல்ஹாசனின் இந்த பதில் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இடையேயான நீண்டகால நட்பு குறித்து ரசிகர்களும் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
