ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த ‘கருப்பு’ திரைப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், படத்தின் இரண்டாம் பாதியில் இடம்பெற்ற ஒரு குறிப்பிட்ட காட்சி தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த காட்சியில், போராட்டம் தொடர்பான காட்சிகளுக்கு பின்னணியாக இசையமைப்பாளர் இளையராஜா இசையில் உருவான ‘போராடடா ஒரு வாள் ஏந்தடா’ என்ற பாடல் பயன்படுத்தப்பட்டிருந்தது. பாடலை உரிய அனுமதி பெறாமல் பயன்படுத்தியதால் இளையராஜா வழக்கு தொடர்ந்ததாக அந்த காட்சி நகர்கிறது. இதைத் தொடர்ந்து வரும் மற்றொரு காட்சியில், “பாட்டை நிறுத்துங்க… இளையராஜா காப்பீடு கேட்கப் போறார்” என்ற வகையில் ஆர்.ஜே. பாலாஜி வசனம் பேசியிருப்பது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக இளையராஜாவின் ரசிகர்கள் இந்த காட்சிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, அந்த பகுதியை உடனடியாக நீக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் வலியுறுத்தி வந்தனர். இந்த விவகாரம் பெரிதாக பேசப்பட்ட நிலையில், தற்போது டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், “இசையமைப்பாளர் இளையராஜா இந்திய சினிமாவிற்கும் இசைத்துறைக்கும் ஆற்றியுள்ள அசாதாரண பங்களிப்பிற்கு டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தனது மனமார்ந்த மரியாதையையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது. அவரது இசை பல தலைமுறைகளுக்கு ஊக்கமாக இருந்து வருகிறது. உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களின் மனதில் அவர் தனி இடம் பிடித்துள்ளார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ‘கருப்பு’ திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு குறிப்பிட்ட வசனம் அவருக்கு மனவருத்தத்தையும் உளைச்சலையும் ஏற்படுத்தியிருப்பதை நாங்கள் அறிந்துள்ளோம். அந்த வசனம் அத்தகைய உணர்வுகளை ஏற்படுத்தியிருந்தால் அதற்காக எங்களது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். இளையராஜாவையோ, அவரது பங்களிப்பையோ அல்லது அவரது உரிமைகளையோ எந்த விதத்திலும் அவமதிக்க எங்களுக்குத் திட்டமோ நோக்கமோ இல்லை. அந்த வசனம் ஒரு பரந்த நையாண்டி சூழ்நிலையின் பகுதியாக மட்டுமே பயன்படுத்தப்பட்டது. அது அவரை தனிப்பட்ட முறையில் குறிவைத்து எழுதப்பட்டதல்ல” என்றும் கூறப்பட்டுள்ளது.
அதோடு, “இருப்பினும், அவரது உணர்வுகளை நாங்கள் ஆழமாக மதிக்கிறோம். அதற்கான மரியாதையாக, திரைப்படத்தின் எதிர்கால பதிப்புகள் மற்றும் அடுத்தடுத்த வெளியீடுகளில் அந்த குறிப்பிட்ட காட்சியை நீக்க அல்லது மாற்ற முடிவு செய்துள்ளோம். அவருக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். என்றும் அவரை மிக உயர்ந்த மரியாதையுடன் நடத்துவோம்” என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
