கேரள சினிமா துறைக்கு ‘தொழில்துறை’ அந்தஸ்து வழங்க முடிவு – கேரள அமைச்சர் விஷ்ணுநாத்!

கேரள திரைத்துறைக்கு புதிய அங்கீகாரம் வழங்கும் வகையில், சினிமாவை ‘தொழில்’ என்ற அந்தஸ்துக்கு கொண்டு வர அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் விஷ்ணுநாத் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணியின் 100 நாள் செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

அக்டோபர் 10-ம் தேதிக்குள் கேரள சினிமாவுக்கு தொழில் அந்தஸ்து வழங்குவதற்கான நடவடிக்கைகள் நிறைவு செய்யப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். இதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் நடைமுறை மாற்றங்கள் தொடர்பாக அரசு அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் இதுவரை எந்த மாநிலமும் சினிமாவை அதிகாரப்பூர்வமாக ஒரு தொழில்துறையாக அங்கீகரிக்கவில்லை என்றும், அந்த வகையில் கேரளம் முதல் மாநிலமாக இந்த முடிவை எடுக்கவுள்ளதாகவும் விஷ்ணுநாத் தெரிவித்துள்ளார். திரைத்துறை முறையான தொழில் கட்டமைப்புக்குள் கொண்டுவரப்பட்ட பின்னர், தேவையான நிர்வாக மாற்றங்களும் மேற்கொள்ளப்படும் என கூறியுள்ளார்.

இந்த அங்கீகாரம் நடைமுறைக்கு வந்தால் தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள் உள்ளிட்ட திரைத்துறையினர் பல்வேறு வகைகளில் பயனடைய வாய்ப்புள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இதனால் கேரள சினிமா துறையில் புதிய மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading