பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் சமூகநீதித் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் சட்டப்பேரவையில் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும் எம்எல்ஏ-வுமான தமிமுன் அன்சாரி, தமிழ் சினிமாவில் சமூக அக்கறையுடன் உருவாகும் படைப்புகளை அரசு அங்கீகரிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
தமிழகத்தில் சிறந்த திரைப்படங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றுக்கு விருதுகள் வழங்கும் நடைமுறை தொடர்ந்து இருந்து வருவதை சுட்டிக்காட்டிய அவர், அந்த வகையில் ‘சிறை’ மற்றும் ‘ஹபீபி’ ஆகிய திரைப்படங்களுக்கும் சிறப்பு விருதுகள் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் விக்ரம் பிரபு, எல்கே அக்ஷய் குமார், அனிஷ்மா அனில்குமார் உள்ளிட்டோர் நடித்த ‘சிறை’ திரைப்படம், 5 ஆண்டுகளாக விசாரணைக் கைதியாக சிறையில் இருக்கும் அப்துல் ரௌஃபின் வாழ்க்கையை மையமாகக் கொண்டது. அதிகாரத்தின் பிடியில் சிக்கித் தவிக்கும் எளிய மக்களின் வாழ்க்கையையும், அவர்களுக்கு கிடைக்கும் சிறிய அதிகாரம் கூட எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதையும் இப்படம் பதிவு செய்துள்ளது.
அதேபோல், கடையநல்லூர் பகுதியில் மூன்று தலைமுறைகளாக நெசவுத் தொழில் செய்து வரும் யூசுப் மற்றும் அவரது குடும்பத்தைச் சுற்றி ‘ஹபீபி’ திரைப்படத்தின் கதை அமைந்துள்ளது. கஸ்தூரி ராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம், ஒரு குறிப்பிட்ட அடையாளத்துக்குள் அடைக்கப்பட்ட மக்களின் மனங்களிலும் மனிதநேயமும் அன்பும் நிறைந்திருக்கிறது என்பதை பேசும் படைப்பாக அமைந்துள்ளது.
—
