திரைப்படங்களில் நடிகர்கள் மற்றும் நடிகைகள் தாங்கள் ஏற்கும் கதாபாத்திரங்களுக்கு ஏற்ப உடல் அமைப்பை மாற்றிக் கொள்வது சினிமா துறையில் சாதாரண விஷயமாக மாறியுள்ளது. குறிப்பாக முன்னணி ஹீரோக்கள் பலரும் கதாபாத்திரத்தின் தேவைக்கேற்ப உடல் எடையை அதிகரித்தோ அல்லது குறைத்தோ நடித்துவரும் நிலையில், தற்போது பல கதாநாயகிகளும் அதே பாதையை பின்பற்றி வருகின்றனர். இதற்காக அவர்கள் ஜிம்மில் கடுமையான உடற்பயிற்சிகளில் ஈடுபட்டு, கட்டுப்பாட்டான டயட்டுகளை பின்பற்றி தங்களது உடலமைப்பை பராமரித்து வருகின்றனர். அதேசமயம், சில நடிகைகள் உடல் எடையை குறைக்க அறுவை சிகிச்சை செய்து கொள்கிறார்கள் என்ற வதந்திகளும் அடிக்கடி பரவி வருகின்றன. அந்த வகையில், சமீபத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் குறித்து பரவிய வதந்திகளுக்கு அவர் நேரடியாக பதிலடி கொடுத்துள்ளார்.
சமீப காலமாக சற்று உடல் எடை அதிகரித்த தோற்றத்தில் காணப்பட்ட கீர்த்தி சுரேஷ், திடீரென மிகவும் ஒல்லியான தோற்றத்தில் தோன்றியதால் ரசிகர்கள் ஆச்சரியமடைந்தனர். இதையடுத்து சமூக வலைதளங்களில் சிலர், அவர் உடல் எடையை குறைக்க அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக வதந்திகளை பரப்பினர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஜிம்மில் கடுமையாக உடற்பயிற்சி செய்யும் வீடியோவை கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து, டிரோல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியதாவது: “2013ஆம் ஆண்டு நான் சினிமா பயணத்தை தொடங்கிய போது பிட்னஸ் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஜிம் போன்ற விஷயங்கள் நமக்கு பொருந்தாது என்றே நினைத்தேன். ஆனால் 2018ஆம் ஆண்டு ‘மகாநதி’ (நடிகையர் திலகம்) திரைப்படத்திற்கு பிறகு உடல்நலன் மற்றும் பிட்னஸ் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று முடிவு செய்தேன். அதன்படி சரியான உடற்பயிற்சிகளும், கட்டுப்பாட்டான டயட்டும் பின்பற்றி 9 மாதங்களில் 10 கிலோ எடையை குறைத்தேன்.
ஆனால் தற்போது சிலர், ‘நீ மிகவும் ஒல்லியாக இருக்கிறாய், உடல் எடையை குறைக்க ஏதாவது சர்ஜரி செய்துக்கொண்டாயா?’ என்று கேட்கிறார்கள். இது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. நான் சற்று குண்டாக இருந்தபோது ‘உடல் எடையை குறை’ என்று சொன்ன அதே மனிதர்கள்தான், இப்போது உடல் எடையை குறைத்த பிறகு ‘முன்பு இருந்த மாதிரியே இருந்தால் தான் அழகாக இருப்பாய்’ என்று கூறுகிறார்கள். இந்த உலகம் உண்மையில் என்ன நினைக்கிறது என்பது எனக்கு புரியவில்லை” என்று கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.
