ஆதரவற்ற வாழ்க்கையில் வளர்ந்த நாயகன் ஜெய், ஒரு ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அந்த சமயத்தில் நாயகியான மீனாட்சி கோவிந்தராஜனை முதன்முதலாக பார்த்தவுடன் அவர்மீது காதல் கொள்ளுகிறார். அதே நாளில், ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொண்ட மீனாட்சியை ஜெய் காப்பாற்றுகிறார். இந்த சம்பவத்திற்குப் பிறகு இருவருக்கும் நெருக்கம் அதிகரித்து, காதலாக மாறுகிறது. பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டு புதிய வாழ்க்கையை தொடங்குகின்றனர்.
திருமணத்திற்குப் பிறகு, ஜெய் மற்றும் மீனாட்சி இருவரும் கொடைக்கானலுக்கு ஹனிமூனுக்கு செல்கின்றனர். அங்கு கருடன் ராம் நடத்தி வரும் ஒரு ரிசார்ட்டில் தங்குகிறார்கள். ஆனால் அங்கிருந்து திரும்பி வந்த பிறகு, ஜெய் மற்றும் மீனாட்சி இடையே தொடர்ந்து பிரச்சனைகள் மற்றும் கருத்து வேறுபாடுகள் உருவாகின்றன. அதே நேரத்தில், கருடன் ராம் நடத்தும் அந்த ரிசார்ட்டில் ஏதோ மர்மமான விஷயங்கள் நடப்பதை ஜெய் கவனிக்க தொடங்குகிறார்.
மற்றொரு பக்கம், மீனாட்சியின் தந்தையாக வரும் அமைச்சர் அஜய், தனது மகளை இரண்டாவது மனைவியாக ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க திட்டமிடுகிறார். அதேசமயம், மீனாட்சியின் நண்பர் ஒருவரும் சொத்துக்காக அவரை திருமணம் செய்ய முயற்சிக்கிறார். இப்படியாக பல பிரச்சனைகள் சூழ்ந்த நிலையில், ஜெய் மற்றும் மீனாட்சி இருவரும் இறுதியில் ஒன்றாக இணைந்து வாழ்ந்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக்கதையாக நகர்கிறது.
இந்த படத்தில் நாயகனாக நடித்துள்ள ஜெய், ஐடி நிறுவனத்தில் வேலை செய்யும் இளைஞராக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். காதல், உணர்ச்சி, நடனம், பாசம், அழுகை என பல்வேறு உணர்வுகளை சிறப்பாக வெளிப்படுத்தி தனது கதாபாத்திரத்தில் கவனம் ஈர்த்துள்ளார். குறிப்பாக, மீனாட்சி கோவிந்தராஜனுடன் வரும் காதல் மற்றும் ரொமான்ஸ் காட்சிகளில் அவரது நடிப்பு ரசிகர்களை கவர்கிறது.
நாயகியாக நடித்துள்ள மீனாட்சி கோவிந்தராஜன் மிகவும் எதார்த்தமான நடிப்பை வழங்கியுள்ளார். ஜெய் மீது காட்டும் அன்பு, தந்தையின் மீது வெளிப்படுத்தும் வெறுப்பு, நண்பரிடம் காண்பிக்கும் கோபம் என பல்வேறு உணர்ச்சிகளை திறமையாக வெளிப்படுத்தியுள்ளார். வில்லனாக நடித்துள்ள கருடன் ராம் தனது வில்லத்தனமான நடிப்பால் மிரட்டியுள்ளார். அவருக்கு இணையாக அமைச்சர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள அஜயும் வில்லத்தனத்தில் கவனம் ஈர்த்துள்ளார்.
யோகிபாபுவின் காமெடி காட்சிகள் இடையிடையே ரசிகர்களை சிரிக்க வைக்கின்றன. ஒரு முழுமையான கமர்ஷியல் திரைப்படத்திற்குத் தேவையான அனைத்து அம்சங்களையும் இணைத்து இயக்குநர் பாபு விஜய் படத்தை இயக்கியுள்ளார். காதல், குற்றம், ஆக்ஷன் மற்றும் த்ரில்லர் அம்சங்களுடன் திரைக்கதை விறுவிறுப்பாக நகர்கிறது. ஆரம்பத்தில் மெதுவாக நகரும் கதைக்களம், பின்னர் வேகமெடுத்து சுவாரஸ்யத்தை அதிகரிக்கிறது. சில இடங்களில் லாஜிக் மீறல்கள் இருந்தாலும், மொத்தத்தில் படம் ரசிக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளது. கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைப்பில் இடம்பெற்றுள்ள பாடல்கள் கேட்கும் வகையில் அமைந்துள்ளன. பின்னணி இசையும் கதைக்கு ஏற்றபடி அமைந்துள்ளது. ரிச்சர்ட் எம். நாதனின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.
