நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் தற்போது விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுகியுள்ளனர். இந்த வழக்கு குடும்பநல நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், பாடகி கெனிஷா பிரான்சிஸுடன் ரவி மோகன் நெருக்கமாக பழகி வருவதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகின. இருவரும் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொண்டதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு ஆர்த்தி குறித்து கெனிஷா எந்தவிதமான கருத்துகளையும் வெளியிடக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன் பின்னர், தன்னுடைய வாழ்க்கையில் சந்தித்த துயரங்கள் மற்றும் வேதனைகள் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு கெனிஷா விளக்கம் அளித்திருந்தார்.
மேலும், தனது மற்றொரு சமூக வலைதள பதிவில், “நான் ரவி மோகனை விட்டு பிரிந்துவிட்டேன். சென்னையையும் விட்டு வெளியேறிவிட்டேன். சமூக வலைதளங்களில் தொடர்ந்து வரும் விமர்சனங்களும், சூழ்ச்சிகளும் என்னை மிகவும் சோர்வடையச் செய்துவிட்டன. உண்மை வெற்றி பெறும் நாள் வரைக்கும் நான் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளங்களிலிருந்தும் விலகி இருக்கிறேன். பெண்ணியம் வெற்றி பெற்றிருக்கலாம், ஆனால் மகிழ்ச்சி தோல்வியடைந்துவிட்டது” என்று பதிவிட்டிருந்தார்.
இந்த சூழலில், சென்னை நகரில் செய்தியாளர்களை சந்தித்த ரவி மோகன் பல அதிர்ச்சிகரமான கருத்துகளை பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், “சில விஷயங்களை மக்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இது சினிமாவை சார்ந்த பேட்டி அல்ல, என் தனிப்பட்ட வாழ்க்கையை சார்ந்த ஒன்று. அமைதியாக இருந்த ஒருவரை தொடர்ந்து சீண்டினால் அவர் எப்படி மாறுவார் என்பதை அனைவரும் பார்க்க நேரிடும். இத்தனை நாட்களாக நான் பேசாமல் இருந்தது என் தவறு. அது முட்டாள்தனமாக மாறிவிட்டது.
எனக்கு மற்றவர்களைப் போல பெரிய குழுவோ, ஆதரவோ கிடையாது. கடந்த 23 ஆண்டுகளாக சினிமாவில் பணியாற்றி வருகிறேன். என் குடும்பத்தை பற்றி யாராவது தவறாக பேசினால் நான் அமைதியாக இருக்க மாட்டேன். பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிராக படங்கள் எடுத்தவன் நான். பெண்களை மதிக்க தெரியாதவன் அல்ல. என் அம்மா என்னை அந்த மாதிரி வளர்க்கவில்லை. பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் நடித்தும், உருவாக்கியும் வந்திருக்கிறேன்.
நான் இவ்வளவு நாள் அமைதியாக இருந்ததற்கான காரணம் உண்மை ஒருநாள் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையால்தான். என் குழந்தைகள்மீது எனக்கு பாசம் இல்லை என்று சிலர் பேசுகிறார்கள். என் அன்பைப் பற்றி யாரும் கேள்வி கேட்க வேண்டாம். அந்த வாழ்க்கை எனக்கு பொருந்தவில்லை என்பதை உணர்ந்தபிறகுதான் வெளியே வந்தேன். 14 ஆண்டுகள் மன வேதனையுடன் வாழ்ந்தேன். குழந்தைகளை பாதுகாவலர்களுடன் பள்ளிக்கு அனுப்பும் நிலை ஏற்பட்டுள்ளது. இணைய தளங்களில் நடந்த துன்புறுத்தலால் கெனிஷா நகரையே விட்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதை செய்தவர்களை நான் சும்மா விட மாட்டேன்.
எதுவும் இல்லாமல் நான் வீட்டை விட்டு வெளியே வந்தேன். ஆனால் அவர்கள் கோடிக்கணக்கான சொத்துகளுடன் வசதியாக வாழ்கிறார்கள். என்னை எவ்வளவு விமர்சித்தாலும் நான் அமைதியாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். இனி நான் அமைதியாக இருக்க மாட்டேன். அந்த வீட்டில் என்ன நடந்தது என்பது அந்த தெருவிலுள்ளவர்களுக்கே தெரியும். அந்த குடும்பம் வேண்டாம் என்று என் பெற்றோர்களே என்னிடம் கேட்டார்கள். ஆனால் நான் அவர்களின் பேச்சைக் கேட்கவில்லை. என் கடினமான நேரத்தில் என்னுடன் இருந்தவர் கெனிஷாதான். என் குழந்தைகளுக்காகத்தான் இன்னும் நான் பொறுமையாக இருக்கிறேன். என் தொழிலே நடிகையாக உள்ள பெண்களுடன் வேலை செய்வது. அப்படியிருக்கையில், இப்போது இந்த வயதில் நான் தவறான பாதைக்கு செல்வேனா? 23 ஆண்டுகளாக எந்த குற்றச்சாட்டும் இல்லாமல் வாழ்ந்து வருகிறேன்.
என்னை நிம்மதியாக வாழவிடாமல் துன்புறுத்துகிறார்கள். என் பெயரில் தனியாக ஒரு வங்கி கணக்கும் இல்லை. ஒரே ஒரு கணக்கு மட்டுமே இருந்தது, அது என் முன்னாள் மனைவியுடன் இணைந்த கணக்காக இருந்தது. நான் சம்பாதித்த பணத்திற்கெல்லாம் கணக்கு சொல்லிக்கொண்டே வாழ்ந்தேன். என்னிடம் நடந்த அநியாயங்களை வெளியில் சொல்ல முடியாத நிலை உள்ளது. நான் ரத்த வாந்தி எடுக்கும் அளவுக்கு மன உளைச்சலில் இருக்கிறேன். என்மீது பிளாக் மேஜிக் செய்திருக்கிறார்கள். நான் உயிரோடு இருக்கக்கூடாது என்று நினைக்கிறார்கள். ஆனால் அதற்குமுன் உண்மையை வெளிக்கொண்டு வந்து, சிரித்த முகத்தோடு இந்த உலகை விட்டு போவேன்.
மூன்றெழுத்து கொண்ட ஒரு நடிகை என் குடும்பத்தை சீரழிக்க முயற்சி செய்கிறார். என்னைப் பற்றி பேச அவருக்கு என்ன தகுதி இருக்கிறது? ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போலியான வீடியோக்கள் உருவாக்கி எனக்கு எதிராக வெறுப்பை பரப்புகிறார்கள். இணைய தள துன்புறுத்தலால் பலர் உயிரிழந்திருக்கிறார்கள். என்னை ஒரு அடிமை போல வைத்திருந்தார்கள். எனக்கு நடந்தது பிளாக்மெயில் திருமணம். கையை அறுத்து தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டி என்னை திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களது குடும்ப தயாரிப்பு நிறுவனத்தில் மட்டுமே நடிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தினார்கள்.
கெனிஷா உண்மையான பெண்ணியவாதி. மற்றவர்களின் பணத்தில் வாழ்பவர் அல்ல. என் முன்னாள் மனைவியின் குடும்பத்திற்கு மாதந்தோறும் மருந்து செலவுக்காக ரூ.25 ஆயிரம் அனுப்பியிருக்கிறேன். சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும், வேறு எந்த வேலையையும் செய்து வாழ முடியும். என்னை மன்னித்துவிடுங்கள். தற்போது என்னால் வேலை செய்ய முடியவில்லை. என் தனிப்பட்ட பிரச்சினைகள் முடிந்த பிறகுதான் மீண்டும் பணிக்கு வருவேன். விவாகரத்து கிடைக்கும் வரை நான் எந்தப் படத்திலும் நடிக்க மாட்டேன். என்னுடைய படங்களும் வெளியாகாது” என்று ரவி மோகன் தெரிவித்துள்ளார்.
